/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் தலை துாக்கும் போதை கலாசாரம்
/
கொடைக்கானலில் தலை துாக்கும் போதை கலாசாரம்
ADDED : ஜன 12, 2025 05:09 AM
கொடைக்கானல் : கொடைக்கானலில் நாளுக்கு ,நாள் புதுவித போதை கலாசாரங்கள் அதிகரித்து வருவதை போலீசார் கண்டுகொள்ளாத நிலை உள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் என்றால் சுற்றுலா என்ற நிலை மாறி போதை கலாசாரம் என்ற நிலை தலைதுாக்கி வருகிறது. கஞ்சா,போதை காளான், போதை ஸ்டாம்ப், மெத்த பெட்டமைன், தடை புகையிலை , ஊமத்தான் பூ, குதிரை தாழி கிழங்கு, வலி நிவாரண தைலம் என நாளுக்கு நாள் கொடைக்கானலில் புதிய வகையான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவது கவலை அளித்துள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் இவ்வகையான போதை வஸ்துகளை இணையதளங்களில் தேடி தொலை துார மலைப்பகுதியில் அவற்றை பயன்படுத்தும் நிலையில் உள்ளது. பெயரளவிற்கு போலீசார் அவ்வப்போது கடும் நடவடிக்கை எடுப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திய போதும் இக்கலாசாரம் ஒழிந்ததாக இல்லை. பஸ் ஸ்டாண்ட், ஏரிச்சாலை, மூஞ்சிக்கல் அப்சர்வேட்டரி,வட்டக்கானல், கவுஞ்சி , பூண்டி, மன்னவனுார், கூக்கால், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இவை தாராள புழக்கத்தில் உள்ளது.
இதோடு போலி மதுபான விற்பனையும் ஜோராக நடக்கிறது.
சுற்றுலா பயணிகளிடம் டிரெண்டிங்காகும் வகையில் இவற்றை இணையதளங்களில் வைரலாக பரவவிடும் வீடியோக்களும் வெளிவருகின்றன. சுற்றுலா பயணிகளை குறி வைத்து இது போன்ற போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகள் சமூக வலைதளங்களில் இவற்றை லாவகமாக பரவ விடுவதை கையாண்டு உள்ளனர். போலீசாரும் மந்த நிலையை கடைபிடிக்கின்றனர். எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை. 6 மாதத்திற்கு முன் போதை காளான் பயன்படுத்துவது, விற்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிப்பு பதாகை வைத்து விழிப்புணர்வு பதாகை அமைத்தும் கட்டுக்குள் வரவில்லை. இது போன்ற நிலை சுற்றுலா நகரின் மாண்பை சீர்குலைப்பதாக உள்ளது. இனியாவது சுற்றுலா நகரில் போதை கலாசாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.