/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பசுஞ்சோலையாக மாறவுள்ள கிரிவலப்பாதை
/
பசுஞ்சோலையாக மாறவுள்ள கிரிவலப்பாதை
ADDED : ஜூலை 14, 2025 12:38 AM

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதையை சுற்றி 3000 மரங்களை நடும் பணியை எவர் கிரீன் சிட்டி கிளப் தொடங்கியுள்ளது. ஒட்டன்சத்திரம் பகுதியில் தன்னார்வ அமைப்புகள், நகராட்சி, ஊராட்சிகள் பல வகையான மரங்களை நட்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றன. ஒட்டன்சத்திரம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் மலையைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையை சுற்றி எண்ணற்ற மரங்களை நட தன்னார்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதில் விழுதுகள் அமைப்பும், பினாக்கில் மகளிர் அமைப்பையும் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் எவர் கிரீன் சிட்டி கிளப் 3000 மரங்களை நட்டு மேலும் பசுமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.மாசில்லா ஒட்டன்சத்திரத்தை உருவாக்குவதில் எவர் கிரீன் சிட்டி கிளப் உறுப்பினர்கள் மரக்கன்றுகள் நடும் பணியை செய்து வருகின்றனர். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ல் அமைச்சர் சக்கரபாணி, எவர் கிரீன் சிட்டி கிளப்பின் 3000 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் பல வகையான மரக்கன்றுகளை நட்டு முடிக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்டு எவர்கிரீன் சிட்டி கிளப் செயல்பட்டுள்ளது.
தூய்மையான காற்று
பொன் கார்த்திக், உறுப்பினர், எவர்கிரீன் சிட்டி கிளப்: மாறிவரும் பருவ நிலைக்கு மிக முக்கியமான காரணம் மரங்களை அழிப்பது தான். புவியின் வெப்பநிலையை குறைக்க மரங்கள் நடுவது மிகவும் அத்தியாவசியமானது. தமிழக அரசு, சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மரங்கள் நடுவதையும், அதனால் வரும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மரம் வளர்த்தால் தான் மழையை பெற முடியும், மழை பொழிந்தால் தான் நாம் உயிர் வாழ்வதற்கு முக்கியமான குடிநீரை பெற முடியும். இதனை எல்லாம் கருத்தில் கொண்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் மலையை சுற்றி எவர்கிரீன் சிட்டி கிளப் மூலம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இப்பபணியினை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
பசுஞ்சோலையாக மாறும்
விஜயகுமார், உறுப்பினர், எவர்கிரீன் சிட்டி கிளப்: அதிகமான மரக்கன்றுகளை நடுவதன் மூலம் ஒட்டன்சத்திரம் பகுதியில் வனப்பரப்பு அதிகரிக்கப்படுவதுடன் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்.
மேலும் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். மண் அரிப்பை தடுத்து பறவைகள், விலங்குகளுக்கு வாழிடம், நிழல் தருதல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். எவர்கிரீன் சிட்டி கிளப் சார்பில் 3000 மரக்கன்றுகள் ஆறு மாத காலத்திலும் நட முடிவு செய்துள்ளோம். இதற்கான பணிகள் முழுவீச்சுடன் நடந்து வருகிறது.
வளர்ந்து மரங்களாக மாறிய பின் குழந்தை வேலப்பர் மலை மட்டுமின்றி ஒட்டன்சத்திரம் பகுதி முழுவதும் பசுஞ்சோலையாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.