/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பைபாஸ் ரோட்டில் சர்வீஸ் ரோடுகள் இல்லாததால் அவதி
/
பைபாஸ் ரோட்டில் சர்வீஸ் ரோடுகள் இல்லாததால் அவதி
ADDED : ஜூலை 29, 2025 12:57 AM

ஒட்டன்சத்திரம்: லெக்கையன்கோட்டை- பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டில் காளாஞ்சிபட்டி மேம்பாலம் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படாமல் இருப்பதால் திண்டுக்கல், மதுரைக்கு செல்ல வாகனங்கள் ஒருவழிப் பாதையில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது.
லெக்கையன் கோட்டை, பொள்ளாச்சி இடையே புதிதாக பைபாஸ் ரோடு போடப்பட்டுள்ளது.
அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லப்பட்டி, குறிஞ்சி நகர் வழியாக இந்த ரோடு செல்கிறது. பைபாஸ் ரோடு முறையான திட்ட மிடுதலுடன் அமைக்கப்படாததால் பல கிராமங்களுக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் உள்ளது.
பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் ஒருவழிப்பாதையின் எதிரே பயணித்து ரோட்டை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் உருவாகிறது.
தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டின் குறுக்கே பைபாஸ் ரோடு குறுக்கிடுகிறது. இந்த ரோட்டின் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
மேம்பாலம் பகுதியில் இருந்து பைபாஸ் ரோட்டிற்கு செல்வதற்கு இன்னும் சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. திண்டுக்கல், மதுரை வழித்தடங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ஒரு வழி பாதையில் பயணித்து டிவைடரை கடந்து இடது புறம் செல்கின்றன.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இதனால் எரிபொருள் செலவு அதிகமாவதுடன் கால விரயமும் ஏற்படுகிறது. தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடுகள் அமைத்து விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் வழித்தடத்தில் திரும்பும் இடத்தில் ரவுண்டானா அமைக்கப்படாததால் கன்டெய்னர் லாரிகள் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. முன்னால் சென்று ரிவர்ஸ் எடுத்து திரும்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தேவை ரவுண்டானா செந்தில்குமார், அ.தி.மு.க., இளைஞரணி இளம் பெண்கள் பாசறை ஒன்றிய துணைத் தலைவர், ஒட்டன்சத்திரம் : பைபாஸ் ரோட்டில் தேவையான இடங்களில் சர்வீஸ் ரோடுகளை அமைக்க முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியம் காட்டுவதால் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது.
கிராம மக்களின் வசதிகளை புறக்கணித்து பைபாஸ் ரோடு போடப்படுகிறது. முறையான சர்வீஸ் ரோடு இல்லாததால் ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோடு போடப்பட்டதிலிருந்து இதுவரை வாகன விபத்துக்களில் பலர் பலியாகி உள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்து உள்ளனர். முக்கிய இடங்களில் சர்வீஸ் ரோடுகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகின்றனர். தாராபுரம் ரோட்டில் கனரக வாகனங்கள் எளிதில் திரும்பும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
ஆபத்தான முறையில் பயணம் காமாட்சி ராஜா, பொறி யாளர், ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் காளாஞ்சிபட்டி மேம்பாலத்தில் சர்வீஸ் ரோடு இல்லாததால் ஒருவழிப் பயணம் அதிகரித்துள்ளது.
இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. மேம்பாலத்தில் விளக்குகள் இருந்த போதிலும் அவை எரிவதில்லை.
பைபாஸ் ரோட்டில் இருந்து கொல்லப்பட்டி, அதனை சுற்றி கிராமங்களுக்கு செல்வதற்கு பைபாஸ் ரோட்டை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் நிலை உள்ளது.
இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இதே போல் குறிஞ்சி நகர் பகுதியிலும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும்.

