/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலுாரில் பராமரிப்பின்றி கிடக்கும் ரெங்கப்பநாயக்கன் குளம்
/
அய்யலுாரில் பராமரிப்பின்றி கிடக்கும் ரெங்கப்பநாயக்கன் குளம்
அய்யலுாரில் பராமரிப்பின்றி கிடக்கும் ரெங்கப்பநாயக்கன் குளம்
அய்யலுாரில் பராமரிப்பின்றி கிடக்கும் ரெங்கப்பநாயக்கன் குளம்
ADDED : நவ 01, 2025 03:10 AM

வடமதுரை: அய்யலுாரில் கே.ரெங்கப்ப நாயக்கன் குளம் பராமரிப்பின்றி நீரின்றி வறண்டு கிடக்கிறது.
நம் முன்னோர் கடும் பஞ்சங்களை சந்தித்ததையடுத்து பஞ்சத்தில் இருந்து பாதுகாப்பு பெற மழை நீர் சேகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்து ஆங்காங்கே ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகளை உருவாக்கினர். 2003, 2017ல் கூட கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர்.
அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் நிலத்தடி நீர் மட்டம் மேம்பட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாக்கியது குறிப் பிடதக்கது.
இந்நிலையில் சமீப ஆண்டுகளில் பல குளங்கள் அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் நீர் வரத்து வாய்ப்பை இழந்து வருகின்றன.
இவற்றில் ஒரு குளமாக அய்யலுார் அருகே கருவார்பட்டி கே.ரெங்கப்பநாயக்கன் குளம் உள்ளது.
திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையில் இருந்து கடவூர் செல்லும் ரோட்டை யொட்டி 16 ஏக்கரில் இக்குளம் உள்ளது.
பாச்சாநாயக்கனுார், கந்தமநாயக்கனுார், கிருஷ்ணப்பநாயக்கனுார், கருவார்பட்டி, பூனைகரடு மலைப்பகுதியில் இருந்து வழிந்தோடும் மழை நீர் இங்கு வந்து சேரும்.
இக்குளம் நிரம்பி மறுகால் பாயும் போது தும்மினிக்குளத்திற்கு நீர் சென்றடையும். குளத்தில் நீர் தேங்கும்போது இப்பகுதி சார்ந்த ஏராளமான விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.
ஆனால் தற்போது நீர்வரத்து வாய்க்கால் பாதைகள் துார்ந்து கிடப்பதால் நீர் வேறு திசை நோக்கி பயணிக்கும் நிலையில் இங்கு நீர் சேகரமாகும் வாய்ப்புகள் குறைகிறது. இதை கருதி குளத்தில் நீர் பிடிப்பு, வரத்து வாய்க்கால் பாதையை துார் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவனம் செலுத்தலாமே என்.முருகேசன், ஊர் பெரியதனக்காரர், கருவார்பட்டி: அய்யலுார் பூனை கரடு, கந்தமநாயக்கனுார், கிருஷ்ணபப நாயக்கனுார், கருவார்பட்டி, கந்தமநாயக்கனுார் பகுதியில் இருந்து உருண்டோடி வரும் மழை நீரே இக்குளத்திற்கு முக்கிய நீர் வரத்து ஆதார மாகும்.
ஆனால் தற்போது வரத்து வாய்க்கால் பாதைகள், மதகு, மறுகால் கட்டமைப்புகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன.
இதே குளம் ஊராட்சி பகுதியில் இருந்திருந்தால் மகாத்மாகாந்தி ஊரக வேலையுறுதி திட்ட தொழிலாளர்கள் மூலம் நீர் வரத்து வாய்க்கால்களை அவ்வப்போது சுத்தம் செய்திருப்பார்கள்.
இக்குளத்தை சீரமைக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.
தேவை சிறப்பு திட்டங்கள் ஆர்.முருகன், விவசாயி, கிருஷ்ணப்ப நாயக்கனுார்: ரெங்கப்பநாயக்கன்குளம் நிரம்பினால் மறுகால் பாதையில் அமைந்துள்ள தும்மினிக்குளம், முராரிசமுத்திரம் கண்மாய்களுக்கும் நீர் செல்லும். சுற்றுப்பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
நீர் வரத்து வாய்க்கால் பாதை பராமரிப்பின்றி கிடப்பதால் நீர் இங்கே வந்து சேகரமாவதில் சிக்கல் உள்ளது.
அத்துடன் திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையோரம் அமைந்திருக்கும் நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் குப்பை, கழிவுகளை கொட்டும் பிரச்னையும் உள்ளது.
சேகரமாகும் சொற்ப நீரையும் கருவேல மரங்கள் உறிஞ்சிடும் நிலை உள்ளது. குளங்களை பாதுகாக்க சிறப்பு திட்டங்கள் வேண்டும்.
-நடைபயிற்சிக்கு வழி என்.நித்யா , பேரூராட்சி கவுன்சிலர் (தி.மு.க.,), கருவார்பட்டி: இக்குளத்தை துார் வாரி, வாய்க்கால் பாதைகளையும் சீரமைக்க வேண்டும்.
அதற்கு முன்னதாக ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும். அய்யலுாரில் மக்கள் நடைபயிற்சிக்கு ரோடுகளை நம்பியிருக்கும் நிலை உள்ளது.
அய்யலுாரையொட்டி போக்குவரத்திற்கான ரோடு வசதியுடன் இருக்கும் இக்குளத்தில் கரையோர பகுதியில் கரைகள் அமைத்து நடைபயிற்சிக்கு மக்கள் பயன்படுத்தி கொள்ள வழி செய்யலாம். இதை பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்துவேன் என்றார்.

