/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதர் மண்டிய புலிகவைகுளம்; துார்ந்து போன வாய்க்கால்
/
புதர் மண்டிய புலிகவைகுளம்; துார்ந்து போன வாய்க்கால்
புதர் மண்டிய புலிகவைகுளம்; துார்ந்து போன வாய்க்கால்
புதர் மண்டிய புலிகவைகுளம்; துார்ந்து போன வாய்க்கால்
ADDED : ஏப் 13, 2025 03:56 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் மன்னவனுாரில் புதர் மண்டிய நிலையில் உள்ள புலி கவை குளத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த போதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது மவுனம் காக்கின்றனர்.
மன்னவனூரின் நுழைவாயிலில் உள்ளது புலிகவைகுளம். இதற்கு சந்தனப் பாறை தண்ணீர் நீர் வரத்தாக உள்ளது.இதன் மூலம் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மன்னவனுார் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்துள்ளது. ஊராட்சி குளத்தை சீரமைக்காத நிலையில் புதர்மண்டி , குப்பை சூழ்ந்து பராமரிப்பற்று தண்ணீர் தேக்க முடியாத நிலையில் உள்ளது. இக்குளம் மூலம் 15 கி.மீ., பாசன வாய்க்காலும் துார்ந்து போனதால் கிராமத்தினர் சொந்த செலவில் வாய்க்காலை சீரமைக்கின்றனர்.
கிராம நுழைவுவாயிலில் உள்ள இக்குளத்தை சீரமைக்க வலியுறுத்தியும் அதிகாரிகள் ஏனோ கவனம் செலுத்துவதில்லை. குளத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை குவியலால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்று அபாயம், கொசுக்கள் அதிகரிக்கும் கேந்திரமாக உள்ளது.
இக்குளத்தை சீர் செய்து பயன்பட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.
மெத்தன போக்கு
முருகன், விவசாயி: விவசாய முக்கியத்துவம் வாய்ந்த இக்குளத்தை சீரமைக்க வலியுறுத்தி போதும் அதிகாரிகள் ஆண்டு கணக்கில் மெத்தன நிலையை கடைபிடிக்கின்றனர். குளத்தை கிராம மக்கள் ஒன்று கூடி தங்களது சொந்த செலவில் சீரமைக்கும் நிலை உள்ளது. அரசு திட்டத்தின் கீழ் குளத்தை துார்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஊராட்சி நிர்வாகம் குளத்தில் உள்ள சுகாதாரக் கேட்டை சீர் செய்ய முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயம் செழிக்கும்.
காமராஜ், விவசாயி: புலிகவைகுளத்திலிருந்து செல்லும் பாசன வாய்க்கால்கள் துார்ந்து போய் உள்ளது. பொதுப்பணித்துறை , உள்ளாட்சி நிர்வாகம் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி வாய்க்கால்களில் கான்கிரீட் அமைத்து பாசன வசதியை ஒழுங்குபடுத்த வேண்டும். குளத்தில் தண்ணீர் திறக்கும் ஷட்டர்களை புதிதாக அமைத்து மேம்படுத்தினாலே விவசாயம் செழிக்கும்.

