/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அல்லாட விடும் கால்நடைகள்... அலறவிடும் அங்கன்வாடி பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 5வது வார்டு மக்கள்
/
அல்லாட விடும் கால்நடைகள்... அலறவிடும் அங்கன்வாடி பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 5வது வார்டு மக்கள்
அல்லாட விடும் கால்நடைகள்... அலறவிடும் அங்கன்வாடி பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 5வது வார்டு மக்கள்
அல்லாட விடும் கால்நடைகள்... அலறவிடும் அங்கன்வாடி பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 5வது வார்டு மக்கள்
ADDED : அக் 26, 2025 04:53 AM

திண்டுக்கல்: வாழ்வாதார பிரச்னை, வசதிக்குறைபாடு, அடிப்படைத்தேவைகள், பாதுகாப்பு அச்சம் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 5வது வார்டு மக்கள்.
எம்.கே.எஸ்., நகர், மருதாணிக்குளம், பிள்ளையார் பாளையம், எல்.ஐ.சி.,காலனி, பள்ளிவாசல் தெரு, ஆர்.எம்., காலனி உட்பட மேலும் சில முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் மக்களின் முக்கிய வாழ்வாதார பிரச்னையாக மருதாணிக்குளம் குடியிருப்புவாசிகள் பட்டா இல்லாமல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் தொடர்கிறது.
குடிநீர், மின்சாரம் எல்லாம் போராடி பெற்ற நிலையில் குடியிருப்புகளுக்கு பட்டா இல்லாததால் பாதிக்கின்றனர். சுவர்கள் சேதமாகி ஆஸ்பெட்டாஸ் கூரை எப்போது இடிந்துவிழும் என தெரியாத நிலையில் செயல்படும் அங்கன்வாடியில்தான் குழந்தைகள் அடிப்படைக்கல்வி கற்கின்றனர். தெருவில் திரியும் கால்நடைகளால் தொல்லை தாங்கமுடிவில்லை.
பணிகள் முடிக்கப்பட்டு பூட்டியே கிடக்கும் பூங்கா பொதுமக்களுக்கு எந்த பயனுமில்லாமல் காட்சி பொருளாக உள்ளது.
வார்டில் ஒரு பகுதியில் சாலை வசதி சுத்தமாக இல்லை.பயன்படாத சுகாதார கழிப்பிடத்தால் பொதுமக்கள் திறந்தவெளியை நாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
காட்சிப்பொருளாக உள்ளது வேல்முருகன், வழக்கறிஞர், ஆர்.எம்.காலனி: சுயத்தொழிலாக ஆடு, மாடு, கால்நடை வளர்ப்பு , பால் விற்பனை செய்பவர்கள் இந்த வார்டில் அதிகம் உள்ளனர்.
வருமானத்தில் அக்கறை உள்ளவர்கள் கால்நடைகளை கட்டிவைத்து வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை.
தெருக்களில் இஷ்டத்திற்கு அவிழ்த்து விடப்படும் கால்நடைகள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வாகனவிபத்துகளை ஏற்படுத்துகிறது.
அங்கன்வாடியில் பாதுகாப்புக்கென 'கேட்' கூட கிடையாது. சுற்றிலும் புதர்கள், செடி நிறைந்திருக்கும் இடத்திலிருந்து விஷப்பூச்சிகள் வந்தாலும் அந்த ஆபத்தை எதிர்நோக்கித்தான் அவர்கள் படிக்கவேண்டய நிலை உள்ளது. பணிகள் முடித்து பயன்பாட்டுக்கு திறக்காமல் பூங்காவை பூட்டியே வைத்திருக்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக செய்யப்பட்ட திட்டம் ஆண்டுக்கணக்கில் காட்சிப்பொருளாக உள்ளது.
சமூகவிரோத கூடாரம் பிரேம்குமார், மாநகர செயலாளர், ஜனநாயக வாலிபர் சங்கம், திண்டுக்கல்: மருதாணிக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வருகிறார்கள்.
அவர்களின் பிரச்னைக்கு இன்றுவரை தீர்வு இல்லை. பொதுக்கழிப்பறை பயன்பாட்டில் இல்லாததால் பலர் திறந்தவெளியை நாடுகின்றனர். மின்மயானம், குப்பைமேடு, மருதாணிக்குளம் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகம் நடக்கிறது. இரவில் இப்பகுதியே சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கூடாரமாக மாறிவிடுகிறது. இதை கட்டுப்படுத்தவேண்டும். வார்டுக்குட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் சாலை வசதி இல்லை. கவுன்சிலர், இந்த வார்டுக்குள் வந்து மக்கள் குறைகளை கேட்டதாக எந்த நிகழ்வும் இதுவரை நடக்கவில்லை. மக்கள் நல வாழ்வு மையங்களை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும்.
விரைவில் பூங்கா திறக்கப்படும் சுவாதி, கவுன்சிலர் (தி.மு.க.,): அரசின் கவனத்திற்கு பட்டா தொடர்பான பிரச்னையை எடுத்துச்சென்று சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். குடிநீர், மின்சாரம் இல்லாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் கொடுத்துள்ளோம்.
மாநகராட்சி வசம் நிதி இல்லாததால் சில இடத்தில் மட்டும் சாலை பணி நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் செய்து முடிக்கப்படும். புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது. பூங்கா விரைவில் திறக்கப்படும்.
புதிய அங்கன்வாடி மையம் கட்ட சமூக நலத்துறை, மாநகராட்சி இரண்டிலும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. அதில் கவனம் செலுத்தி முயற்சிக்கிறேன். கஞ்சா புழக்கம் குறித்து போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுக்கிறது என்றார்.

