/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மெட்டல் ரோடாக மாறிய தார் ரோடு பரிதவிப்பில் தட்டாரப்பட்டி ஊராட்சி மக்கள்
/
மெட்டல் ரோடாக மாறிய தார் ரோடு பரிதவிப்பில் தட்டாரப்பட்டி ஊராட்சி மக்கள்
மெட்டல் ரோடாக மாறிய தார் ரோடு பரிதவிப்பில் தட்டாரப்பட்டி ஊராட்சி மக்கள்
மெட்டல் ரோடாக மாறிய தார் ரோடு பரிதவிப்பில் தட்டாரப்பட்டி ஊராட்சி மக்கள்
ADDED : ஆக 26, 2025 04:10 AM

வேடசந்துார்: வேடசந்துாரிலிருந்து திருமாணிக்கனுார் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் மினி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நூற்பாலை வாகனங்களும் ஊருக்குள் வர மறுப்பதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக குமுறுகின்றனர்.
வேடசந்துார் மாரம்பாடி ரோட்டிலிருந்து முத்தாகவுண்டனுார், மூப்பனார் நகர், திருமாணிக்கனுார் வரை செல்லும் ரோடு 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் தற்போது கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்று ஆங்காங்கே பெரும் பள்ளமாக மெட்டல் ரோடாக மாறிவிட்டது.
தார் ரோடு சேதத்தால் இப்பகுதிக்கு வந்து சென்ற தனியார் மினி பஸ் சில ஆண்டுகளாக வருவதில்லை. இதனால் பஸ் வசதி இல்லாத நிலையில் இரண்டு கி.மீ., துாரத்திற்கு மக்கள் நடந்தும், டூவீலர்களிலும் சென்று வருகின்றனர். பள்ளி மாணவர்களும் காலை, மாலை நேரங்களில் நடந்தே செல்கின்றனர்.
இந்த ரோட்டில் நுாற்பாலைகளுக்கு செல்லும் வாகனங்களும் முறையாக வராததால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இது மட்டுமின்றி இப்பகுதியில் காவிரி குடிநீர் வராத நிலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே போர்வெல் குடிநீர் வழங்கப்படுகிறது .
வேடசந்துாரிலிருந்து தட்டாரபட்டி ஊராட்சி வழியாக மாரம்பாடி செல்லும் ரோட்டில் குப்பை கிடங்கு வளைவு அருகே குடியிருப்புப் பகுதிகளிலிருந்து செல்லும் கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் அங்குள்ள பாலம் அருகே தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றுப்பகுதி மக்கள் கொசு தொல்லையால் பாதிக்கின்றனர்.
பள்ளம் தோண்டி கழிவு நீர் தேக்கம் எம்.நாச்சிமுத்து, காமராஜர் நகர் : வேடசந்துார் நகர் பகுதியை ஒட்டி தான் தட்டாரப்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள காமராஜர் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாலத்திற்கு அடியில் சென்று கடந்து செல்ல வேண்டும். ஆனால் பாலத்தில் தடுப்பை ஏற்படுத்தி பெரும்பள்ளம் தோண்டி கழிவு நீரை தேக்கி வைத்துள்ளனர். இதனால் சுற்றுப்பகுதியில் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. கூடுதலான கழிவு நீரை தேக்கி வைத்துள்ளதால் கிணற்றில் குடிநீர் பச்சை நிறத்தில் மாறிவிட்டது. நாங்கள் வேறு இடத்திற்கு சென்று தான் குடிநீர் பிடித்து வருகிறோம். குளித்தாலும் அரிப்பு ஏற்படுகிறது. இதையெல்லாம் கேட்பதற்கு ஆள் இல்லை. கழிவுநீர் தேக்கத்தை அகற்றி கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
நடந்து செல்லும் மாணவர்கள் ஜே.பேபி, முத்தா கவுண்டனுார் : வேடசந்துார் மாரம்பாடி செல்லும் ரோட்டிலிருந்து பிரிந்து மூப்பனார் நகர், திரு மாணிக்கனுார் தார் ரோடு செல்கிறது. இந்த ரோடு தற்போது மெட்டல் ரோடு போல் மாறிவிட்டது. இதனால் மினி பஸ் போக்குவரத்தும் இல்லை. வாடகைக்கான கார், ஆட்டோ காரர்களும் வர அஞ்சுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் வேடசந்துார் நகர் ,ஞாயிறு வார சந்தைக்கு சென்றுவர சிரமப்படுகின்றனர். வேடசந்துார் செல்லும் பள்ளி மாணவர்களும் நடந்தே செல்கின்றனர். முத்தாகவுண்டனுார் பகுதியில் மெயின் ரோட்டில் தெரு விளக்கு வசதி இல்லை. வீடுகளுக்கு குடிநீர் வசதியும் இல்லை. இப்பகுதி மக்களின் நலன் கருதி ரோடு வசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என்றார்.