/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழாய் பணிகளுக்காக பந்தாடப்பட்ட தெருக்கள்
/
குழாய் பணிகளுக்காக பந்தாடப்பட்ட தெருக்கள்
ADDED : ஜன 25, 2025 05:07 AM

ஒட்டன்சத்திரம் : குழாய்கள் அமைக்கும் பணியால் சேதப்படுத்தப்பட்ட தெருக்களால் ஒட்டன்சத்திரம் நகராட்சி 17-வது வார்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.
காந்திநகர் , பட்டாளம்மன் கோவில் தெரு உள்ளடக்கிய இந்த வார்டில் தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பல ஆண்டுகளுக்கு பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் குப்பை வாங்கி சென்ற பின்பு காலி இடங்களில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரம் பாதிக்கிறது. வார்டில் உள்ள பல தெருக்களில் சாக்கடை சிறிதாக இருப்பதால் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த தெருக்கள்
சுரேஷ் குமார், நுகர்வோர் ஆர்வலர், காந்திநகர்: சர்ச் அருகே உள்ள ரேஷன் கடை முன்பு இரவு நேரத்தில் குடி மகன்கள் குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். குடிநீர் குழாய் அமைப்பதற்காக ரோடுகள் தோண்டப்பட்டதால் சேதமடைந்து காணப்படுகிறது. கிழக்கு பகுதியில் உள்ள சப்வேயில் தண்ணீர் தேங்காமல் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு முறையாக அமைக்காததால் வாகனங்கள் அதன் மீது ஏறி செல்வதால் சேதமாகிறது.
கொசு மருந்து அடிப்பதில்லை
சாய்மணி, பா.ஜ., நகர செயலாளர்: வார்டில் உள்ள சுகாதார வளாகம் நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. துாய்மை பணியாளர்கள் வந்த சென்ற பிறகு குப்பையை ஆங்காங்கே கொட்டுகின்றனர். இதை துடுக்க குப்பை தொட்டி ஏற்படுத்த வேண்டும். சாக்கடை துார்வாரததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வார்டுக்குள் கொசு மருந்து அடிப்பதே இல்லை. நாய்கள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு
மகாராணி, கவுன்சிலர் (தி.மு.க.,): கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தனியாக புதிய ரேஷன் கடை பிரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்கின்றனர். பட்டாளம்மன் கோயில் தெருவில் நான்கு இடங்களில் சிறு பாலங்கள் , சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தெரு ரோடுகள் சீரமைக்கப்படும். சாக்கடைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடை முன்பு அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் செய்யப்பட்டுள்ளது,என்றார்.

