/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பஸ் இருக்கையை எடுத்துச்சென்ற மாணவன்
/
அரசு பஸ் இருக்கையை எடுத்துச்சென்ற மாணவன்
ADDED : ஜூலை 05, 2025 02:33 AM

வடமதுரை:அரசு பஸ் இருக்கை குஷனை ஆசைப்பட்டு எடுத்துச் சென்ற மாணவனால் கண்டக்டர், டிரைவர் அதிர்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து மாமரத்துபட்டி செல்லும் டவுன் பஸ் தடத்தில், புதிய பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை மாமரத்துபட்டியில் இருந்து அய்யலுார், வடமதுரை வழியே பஸ் திண்டுக்கல் சென்றது. பள்ளி மாணவர்கள் பயணித்தனர்.
பஸ் வடமதுரை கடந்ததும், கடைசி வரிசையில் இருந்த ஒரு சீட்டில் குஷன் மாயமாகியிருந்தது. அதிர்ச்சியான கண்டக்டர் சுகுமார், டிரைவரிடம் கூறி பஸ்சை நிறுத்தி, பயணியரை அவ்வழியாக வந்த வேறு பஸ்சில் அனுப்பினார்.
மாயமான இருக்கையை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வடமதுரை அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களிடம் விசாரித்த போது, அய்யலுார் அருகே ஒரு மாணவர் எடுத்து சென்ற தகவல் கிடைத்தது.
உடனே அப்பள்ளி ஆசிரியர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மாணவர்களின் பைகளை சோதித்த போது, ஒரு மாணவரின் பையில் பஸ் இருக்கை கிடைத்தது. 'குஷன் பிடித்திருந்ததால், அதை கழற்றி எடுத்து வந்தேன்' என, மாணவன் தெரிவித்தான்.
'அப்படி எல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது. அது தவறு' என, மாணவனுக்கு அறிவுரை வழங்கி, இருக்கையை பெற்று, ஒப்படைத்த பின்னரே கண்டக்டர், டிரைவர் நிம்மதியாகினர்.