/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.1.60 கோடி மோசடி செய்த தேனி வணிகவரி ஊழியர் கைது
/
ரூ.1.60 கோடி மோசடி செய்த தேனி வணிகவரி ஊழியர் கைது
ADDED : செப் 26, 2025 11:00 PM
திண்டுக்கல்:வத்தலக்குண்டுவில் தனியார் விடுதிக்கு பார் உரிமம் பெற்று தருவதாக ரூ.1.6 கோடி மோசடி செய்த வழக்கில் தேனியை சேர்ந்த வணிகவரித்துறை ஊழியரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் சந்திரன் 52. இவர் வத்தலக்குண்டுவில் ஓட்டலுடன் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.
இந்த விடுதியில் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த வணிக வரித்துறை ஊழியர் முத்துப்பாண்டி தங்குவது வழக்கம். விடுதியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பார் தொடங்கினால் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனவும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்றும் அதன்மூலம் பார் உரிமம் பெற்றுத் தருவதாக முத்துப்பாண்டி கூறினார். இதோடு பார் உரிமம் பெற, ஜி.எஸ்.டி., வாட் வரிகளை செலுத்த பணம் கேட்டுள்ளார்.
அதன்படி சந்திரன் 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல் தவணையாக ரூ.10 லட்சத்தை கொடுத்தார். சில நாட்களுக்கு பின் சின்னமனுாரை சேர்ந்த சுந்தரமூர்த்தி, போடியை சேர்ந்த குருபாலன், பாலாஜி ஆகியோரை முத்துப்பாண்டி அறிமுகம் செய்து வைத்தார். உரிமம் பெறுவதற்கு மேலும் பணம் தேவை எனக்கூற நேரடியாகவும் வங்கி கணக்கு மூலமாகவும் ரூ.1.60 கோடி கொடுத்துள்ளார். ஆனால் பார் உரிமம் பெற்றுத்தரவில்லை. திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சந்திரன் புகார் அளித்தார். டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி தலைமையிலான போலீசார் முத்துப்பாண்டியை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடுகின்றனர்.