/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பேரூராட்சிகளில் இல்லை செயல் அலுவலர்கள்! கூடுதல் பொறுப்பால் வளர்ச்சி பணிகளில் தொய்வு
/
பேரூராட்சிகளில் இல்லை செயல் அலுவலர்கள்! கூடுதல் பொறுப்பால் வளர்ச்சி பணிகளில் தொய்வு
பேரூராட்சிகளில் இல்லை செயல் அலுவலர்கள்! கூடுதல் பொறுப்பால் வளர்ச்சி பணிகளில் தொய்வு
பேரூராட்சிகளில் இல்லை செயல் அலுவலர்கள்! கூடுதல் பொறுப்பால் வளர்ச்சி பணிகளில் தொய்வு
ADDED : மார் 12, 2024 06:18 AM

சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் மற்றப்படும் பேரூராட்சி செயல் அலுவலர், 'பொறுப்பு' நியமனங்களால் பெரும்பாலான பேரூராட்சிகளில் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அலுவலக நிர்வாகம், அடிப்படை வசதிகள் கண்காணிப்பு, திடக்கழிவு மேலாண்மை பணிகளில் தொய்வு நிலவுகிறது.
மாவட்டத்தில் 23 பேரூராட்சிகள் உள்ளன. சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை, நெய்க்காரப்பட்டி கீரனுார் ,பாளையம், அய்யம்பாளையம் பேரூராட்சிகளுக்கு செயல் அலுவலர்கள் இல்லாத நிலை உள்ளது. சித்தையன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள சிவக்குமார், சின்னாளபட்டி பேரூராட்சி கூடுதல் பொறுப்பை கவனிக்கிறார். இதோடு திண்டுக்கல் பேரூராட்சிகள் உதவி இயக்குனரக தலைமையிடத்து அலுவலக கண்காணிப்பாளர் பொறுப்பிலும் உள்ளார்.
ஒரே நேரத்தில் நலத்திட்ட பணிகளை கண்காணிப்பது, கவுன்சில் கூட்டங்கள் நடத்துவது, பேரூராட்சிகளில் உள்ள நிறை, குறைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, இயக்குனரக உத்தரவிற்கு ஏற்ப அவ்வப்போது பேரூராட்சிகள் சார்ந்த விபரங்களை தயாரித்து அனுப்புவது போன்றவற்றில் தொய்விற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அலுவலக, நிர்வாக பணிகளிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட விஜயநாத் அங்கு பொறுப்பேற்கும் முன் சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்திற்கு மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்டார். இதனால் பல மாதங்களாக பாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாத நிலை நீடிக்கிறது. 50 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள அய்யலுார் பேரூராட்சியின் செயல் அலுவலரான பாண்டீஸ்வரி, பாளையம் பேரூராட்சியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.
வடமதுரை செயல் அலுவலரான அன்னலட்சுமி சுமார் 80 கிலோ மீட்டர் துாரமுள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. அம்மையநாயக்கனுார் பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடிமுருகு 15 கிலோமீட்டர் துாத்தில் உள்ள நிலக்கோட்டை பேரூராட்சியை கவனிக்கிறார். பெரும்பாலான நாட்களில் பூ மார்க்கெட் ஏலம், வணிக வளாகம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு செல்ல வேண்டியுள்ளது.
அய்யம்பாளையம் பேரூராட்சியை மாவட்ட உதவி இயக்குனர் அலுவலக தலைமை எழுத்தர் கல்பனாதேவி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் கோரிக்கைக்காக செயல் அலுவலரை சந்திப்பதற்கான வாய்ப்பு கேள்விக்குறியாகிறது.
பேரூராட்சி நிர்வாகத் துறையில் நிலவும் குளறுபடியால் நலப்பணிகள், சுகாதாரம்,நிர்வாகம் போன்றவற்றில் பெரும் பின்னடைவு நீடிக்கிறது. மாவட்ட நிர்வாகம்தான் இப்பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

