/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர், ரோடு, சுகாதாரம் எதுவும் இல்லை சீவல்சரகு ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
/
குடிநீர், ரோடு, சுகாதாரம் எதுவும் இல்லை சீவல்சரகு ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
குடிநீர், ரோடு, சுகாதாரம் எதுவும் இல்லை சீவல்சரகு ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
குடிநீர், ரோடு, சுகாதாரம் எதுவும் இல்லை சீவல்சரகு ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
ADDED : ஜன 10, 2025 07:32 AM

செம்பட்டி: பாதுகாக்கப்பட்ட குடிநீர், ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட குக்கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆதிலட்சுமிபுரம், சுதனாகியபுரம், சீவல்சரகு, பொம்மனம்பட்டி, ஜே.புதுக்கோட்டை, வேலக்கவுண்டன்பட்டி, கென்டிச்சம்பட்டி, சமத்துவபுரம், புதுக்கோடாங்கிபட்டி, பழைய கோடாங்கிபட்டி, ஆத்துமேடு, நெசவாளர் காலனிகள் உட்பட 10க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ள இந்த ஊராட்சியில் போதிய குடிநீர் , ரோடு, தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. ஜே.புதுக்கோட்டை அருகே ம.பொ.சி., கலைமகள், கமலா நேரு, காந்திஜி நெசவாளர் காலனியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தார் ரோடு வசதி இல்லை. குடிநீர், தெருவிளக்கு வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர். கட்சி நிர்வாகிகளின் தலையீடு, உள்ளாட்சி பிரதிநிதிகள் புறக்கணிப்பு மனப்பான்மையால் இவை தனித் தீவாக தனித்து விடப்பட்டுள்ளன. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
ரோடு சேதம்
எஸ் சுந்தர்ராஜ் ,நெசவாளர், ம.பொ.சி., காலனி : அங்கன்வாடிக்கென தனி கட்டட வசதி இல்லை. இப்பகுதி உருவாக்கப்பட்ட நாள் முதல், தற்போது வரை ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் கேட்டு பலமுறை உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அஞ்சுகம் காலனியில் இருந்து எங்கள் பகுதிக்கு வரும் ரோடு சீரமைக்கப்பட வேண்டும். மெட்டல் ரோடாக உள்ள பகுதியை தார் ரோடாக மாற்றிக் கொடுக்க வேண்டியது அவசியம்.
துார்ந்த நீராதாரம்
சிவக்குமார் ,கூலித்தொழிலாளி, நெசவாளர் காலனி: அனைத்து பகுதிக்கும் குடிநீர் வினியோகம் செய்ய, ஒரே மேல்நிலை நீர் தொட்டியை மட்டுமே நம்பி உள்ளனர். இப்பகுதி விநாயகர் கோயில் அருகே இட வசதி இருந்த போதும் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைப்பதில் அலட்சியம் நீடிக்கிறது. 5க்கு மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் செயல்படாமல் கிடப்பில் உள்ளன. இது தவிர கை அடி பம்ப்கள் பராமரிப்பின்றி புதர் மண்டி துார்ந்து கிடக்கிறது.
மாணவர்கள் அவதி
பொம்மனன் ,ஊர் நாட்டாமை, பொம்மனம்பட்டி : பொம்மனம்பட்டியில் சுகாதாரக் கேடு அதிகரித்து வருகிறது .பழைய மேல்நிலைத் தண்ணீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனை அப்புறப்படுத்தி புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். மயானத்திற்கு ரோடு, சுற்றுச்சுவர், அடிப்படை வசதிகள் இல்லை. தகனமேடை, காத்திருப்போர் கூடம் அமைத்து கொடுக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளின் புறக்கணிப்பு மனப்பான்மையால் அடிப்படை வசதிகள் கிடைப்பதில் தொய்வு நிலவுகிறது.
--நேரில் ஆய்வு
ஹேமலதா (துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஆத்துார் : பிரச்னைகள் குறித்து புகார் மனுக்கள் வரவில்லை. ஊராட்சி செயலரிடம் விசாரித்தபின் நேரில் ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

