/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாம்பழங்களுக்கு விலை இல்லை தினமும் 5 ஆயிரம் டன் வீண்
/
மாம்பழங்களுக்கு விலை இல்லை தினமும் 5 ஆயிரம் டன் வீண்
மாம்பழங்களுக்கு விலை இல்லை தினமும் 5 ஆயிரம் டன் வீண்
மாம்பழங்களுக்கு விலை இல்லை தினமும் 5 ஆயிரம் டன் வீண்
ADDED : மே 26, 2025 02:44 AM

பட்டிவீரன்பட்டி,: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் மாம்பழங்களுக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர். இதனால் தினமும் 5000 டன் பழங்கள் அழுகி வீணாகின்றன.
இம்மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, மருதாநதி அணை, கோம்பை, சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி, தாண்டிக்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புனல்காடுகள், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம் பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் நடக்கிறது.
பிப்., இறுதியில் பூப்பூக்கும். மே, ஜூனில் மாம்பழம் சீசன் களைகட்டும். ஆக., வரை சீசன் நீடிக்கும். இந்த ஆண்டுக்கான மா சீசன் ஏப்ரல் இறுதியில் துவங்கியது.
இப்பகுதியில் கல்லாமை, செந்தூரம், மல்கோவா, அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம்பசந்த், காளைபாடி, சப்பட்டை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ரகங்கள் விளைகின்றன.
சென்றாண்டை விட உயர் ரக காய்கள் இந்தாண்டு காய்த்துள்ளன. அய்யம்பாளையம், சித்தரேவு பகுதி கோடவுன்களில், விவசாயிகளிடமிருந்து உள்ளூர் வியாபாரிகள் கொள்முதல் செய்து கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு மாங்காய்களுக்கு போதிய விலை இல்லாமல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் தோட்டங்களில் உள்ள மரங்களில் விளைந்த மாங்காய்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டுள்ளனர். இவை மரத்திலேயே பழுத்து தினமும் 5 ஆயிரம் டன் வரை வீணாகி வருகின்றன.
அய்யம்பாளையம் மா விவசாயிகள் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: சென்ற ஆண்டு டன் ரூ.18 ஆயிரம் ரூபாய்க்கு விலை போன காய்கள், இந்த ஆண்டு டன் ரூ.4,500 என கட்டுபடியாகாத விலைக்கு கேட்கின்றனர். இந்த விலை பறிப்பு கூலிக்கு கூட கட்டுபடியாகாது. பூச்சி மருந்து உரம், வேலை ஆட்கள் கூலி என பராமரிப்பு செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த மாங்காய்களை மரத்திலிருந்து பறித்து கோடவுன்களுக்கு கொண்டு செல்ல டன்னிற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். இதனால் இப்பகுதி மா விவசாயிகளும், மாமரங்களை விவசாயிகளிடம் குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு மாங்காய்களுக்கு டன் ரூ.30 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல மாங்காய்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையினை நிர்ணயம் செய்ய வேண்டும். இப்பகுதியில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றார்.