/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மயானம் செல்ல இல்லை பாதை: அலைபேசி டவர் வசதியும் இல்லை ஏக்கத்தில் கோம்பைப்பட்டி ஊராட்சி மக்கள்
/
மயானம் செல்ல இல்லை பாதை: அலைபேசி டவர் வசதியும் இல்லை ஏக்கத்தில் கோம்பைப்பட்டி ஊராட்சி மக்கள்
மயானம் செல்ல இல்லை பாதை: அலைபேசி டவர் வசதியும் இல்லை ஏக்கத்தில் கோம்பைப்பட்டி ஊராட்சி மக்கள்
மயானம் செல்ல இல்லை பாதை: அலைபேசி டவர் வசதியும் இல்லை ஏக்கத்தில் கோம்பைப்பட்டி ஊராட்சி மக்கள்
ADDED : ஜன 25, 2024 05:34 AM

நத்தம்: கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி ஊராட்சி கே.அய்யாபட்டியில் மயானத்திற்கு செல்ல பாதை வசதியின்றி, இறந்தவர்களின் உடலை ஆற்றின் வழியே சிரமப்பட்டு எடுத்து செல்கின்றனர். மேலும் அலைபேசி சிக்னல் வசதி இல்லாமல் கோம்பைபட்டி , மலைப்பகுதி கிராம மக்கள் பல்வேறு பிரச்னைகளால் தவிக்கின்றனர்.
சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ளது கோம்பைப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கே.அய்யாபட்டி மயானத்திற்கு செல்ல ரோடு வசதி பல ஆண்டுகளாக இல்லை. சந்தன வர்த்தினி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் நேரங்களில் இறந்தவர்களின் உடலை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே தெரியாது, 23 கி.மீ., துாரம் உள்ள திண்டுக்கல் மின் மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.இதேபோல் 1வது வார்டு குடியிருப்பு பகுதியில் உள்ள சிமென்ட் சாலை, சாக்கடை சேதம் அடைந்து சாலையில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேட்டுடன் உள்ளது. இங்கு பேவர் பிளாக் சாலை அமைக்க அளவீடு நடத்தப்பட்டது. இருப்பினும் பல மாதங்களாகியும் தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை.
மேலும் கோம்பைபட்டி ஊராட்சியில் உள்ள பெரிய கோம்பைப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, பாப்பம்பட்டி உள்ளிட்ட மலைப்பகுதி கிராமங்களில் அலைபேசி டவர் வசதி தற்போது வரை இல்லை. இதனால் கிராம மக்களுக்கு தகவல் தொடர்பு வசதியின்றி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
அற்றில் சிக்கும் வாகனம்
எம். ராஜேந்திரன், கோம்பைப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர்,கே.அய்யாபட்டி:கே.அய்யாபட்டியில் வசிக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல சாலை வசதி இன்றி தவித்து வருகிறோம். ஒருவர் இறந்தால் ஒவ்வொரு முறையும் மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு ஆற்றிலுள்ள மேடு பள்ளங்களை சரி செய்து அதன் பின் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஏ. ரமேஷ், வார்டு உறுப்பினர், பாப்பம்பட்டி:அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குகிறது. ஆனால் கிராம அடிப்படை பிரச்னையான மயானத்திற்கு செல்ல சாலை இல்லை. டவர் வசதி இல்லாததால் விவசாய பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், பால் பொருள்களை விற்பனை, பணப்பரி மாற்றம் போன்றவற்றை செய்ய தகவல் தொடர்பு வசதி இன்றி தினசரி சிக்கல்களை சந்தித்து வருகிறோம். டவர் இல்லாத்தால் எங்கள் பகுதிய இளைஞர்களுக்கு திருமணத்திற்காக பெண் கொடுப்பவர்கள் நிராகரிக்கின்றனர்.
டவர் அமைக்க நடவடிக்கை
சி.ஆர். ஹரிஹரன், ஒன்றிய கவுன்சிலர், கோம்பைப்பட்டி :ஒன்றிய நிதியிலிருந்து அய்யாபட்டி ஜே.ஜே நகர் பகுதியில் 150 மீட்டருக்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
கோம்பைப்பட்டி முத்தாலம்மன் கோயில் பகுதியில் வண்ணக்கல் பதித்தல், மயான சாலை அமைத்தல், பெருமாள்கோவில்பட்டியில் குளியல் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு நிதி வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெருமாள்கோவில்பட்டி, கோம்பைப்பட்டி சுற்றுப்பகுதிகளில் அலைபேசி டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தட்டுப்பாடின்றி தண்ணீர் சப்ளை
கா.தமிழரசி, ஊராட்சி தலைவர், கோம்பைப்பட்டி:ஊராட்சி பகுதியில் நிலவிய கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு புதிய போர்வெல்கள், குடிநீர் பைப் அமைத்து தண்ணீர் தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. பள்ளி கட்டடம் கட்டியது,விரைவில் பணிகள்தொடங்கும்.கே.அய்யாபட்டி அய்யனார் கோவில் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.கே.அய்யாபட்டி மயானத்திற்கு சாலை அமைப்பது குறித்து ஊராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றி வலியுறுத்தி வருகிறோம். விரைவில் அதற்கான நிதியை பெற்று சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.