ADDED : ஜூலை 14, 2026 04:55 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்ச் ரோப் மாற்றப்படுகிறது. இதனால் நேற்று (ஜூலை 13) முதல் 5 நாட்களுக்கு மூன்றாவது வின்ச் செயல்படாது.
இக்கோயிலுக்கு சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயன்பாட்டில் உள்ள 3 வின்ச்களில், மூன்றாவது வின்ச் 36 பேர் பயணிக்கும் வகையில் இயங்குகிறது.
வின்ச் மேலே இழுத்து, கீழே இறக்க 450 மீட்டர் ரோப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோப் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படுகிறது.
இதன் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மூன்றாவது வின்ச்சின் ரோப் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் மதிப்புடைய 450 மீட்டர் நீளமுடைய ரோப்பை மாற்ற பொறியாளர்கள், பணியாளர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஐந்து நாட்களுக்கு ரோப் மாற்றும் பணி காரணமாக மூன்றாவது வின்ச் நிறுத்தப்பட உள்ளது.
ரோப் மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடந்த பிறகு பக்தர்களின் பயன்பாட்டிற்கான சேவை துவங்கும் என, கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 2 வின்ச்கள் வழக்கம் போல் செயல்படும்.
