/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரு பிரிவினர் தகராறில் மூவர் கொலையா? கிணற்றில் உடல்களை தேடிய போலீசார்
/
இரு பிரிவினர் தகராறில் மூவர் கொலையா? கிணற்றில் உடல்களை தேடிய போலீசார்
இரு பிரிவினர் தகராறில் மூவர் கொலையா? கிணற்றில் உடல்களை தேடிய போலீசார்
இரு பிரிவினர் தகராறில் மூவர் கொலையா? கிணற்றில் உடல்களை தேடிய போலீசார்
ADDED : மார் 29, 2025 06:28 AM

திண்டுக்கல் : இரு தரப்பு நிலத்தகராறில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என கிடைத்த தகவலையடுத்து போலீஸ், தீயணைப்புத்துறையினர் கிணற்றில் உடல்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இரு தரப்புக்கு இடையில் நீண்ட நாட்களாக நிலப்பிரச்னை இருந்தது.
இருதரப்பை சேர்ந்தவர்களும் ஆறு மாதங்களுக்கு முன் மோதிக்கொண்டனர். இதில், 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீசப்பட்டதாகவும் தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய இருதரப்பைச் சேர்ந்த 10 பேரிடம் தாலுகா போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், கொலையானதாக கருதப்படுபவர்கள் குறித்த விபரங்கள் தெரிந்தன. அவர்கள் மூன்று பேருமே சில மாதங்களுக்கு முன் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்ததும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக, வடக்கு, தெற்கு, தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் மாயமானதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகமடைந்த போலீசார், நேற்று காலை முதல் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அணைப்பட்டி அருகிலுள்ள கிணற்றில், கொலையானதாக கருதப்படுவோரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றில், 50 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால், தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கொலையானவர்களின் உடைமைகள், எலும்புகள் கிடைத்தால் மட்டுமே மேற்கொண்டு விபரங்களை தெரிவிக்க முடியும் என, போலீசார் தெரிவித்தனர்.