ADDED : செப் 23, 2024 05:05 AM
வடமதுரை : அய்யலுாரில் வேளாண் அலுவலர் சுப்பையா கூறியதாவது: தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும், கோடை காலங்களில் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும்.
அனைத்து வயது மரங்களையும் தாக்கி சேதமாக்கும். மர உச்சியில் விரிவடையாத குருத்துப் பாகத்தில் துளையிட்டு, உள்ளே சென்று மொட்டுப் பகுதியை மென்று விடுகிறது. எருக்குழிகளில் இருக்கும் வண்டின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்களைச் சேகரித்தும் குருத்துப் பாகத்தில் வண்டுகள் இருந்தால் கம்பி, சுளுக்கியால் குத்தி அழிக்க வேண்டும்.
வண்டின் வாயில் 'பேக்குலோ ஓரைடக்ஸ்' என்ற வைரஸை ஊசி மூலம் செலுத்தி ஒரு எக்டேருக்கு 15 வண்டுகளை விட்டால் அது மற்ற வண்டுகளுடன் கலந்து நோய் பரப்பி வண்டுகளை அழிக்கும்.
ரைனோலியூர் இனக்கவர்ச்சி பொறியை எக்டேருக்கு 5 வீதம் வைத்தும்,வேப்பங்கொட்டைத் துாள், மணல் ஆகியவற்றை 1:2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் நடுகுருத்தின் 3 மட்டை இடுக்குகளில் வைத்தும், மண்பானையில் 5 லிட்டர் நீருடன் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை தோப்பில் வைத்தும் வண்டுகளை அழிக்கலாம் என்றார்.