ADDED : பிப் 05, 2026 05:43 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவடைந்து கிலோ ரூ.10 க்கு கீழ் விற்றதால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், அம்பிளிக்கை, ஓடைப்பட்டி, கள்ளிமந்தையம், ஐ.வாடிப்பட்டி, சிந்தலைப்பட்டி, விருப்பாச்சி சுற்றிய கிராமப் பகுதிகளில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களாக தக்காளி கிலோ ரூ.20க்கு மேல் விற்பனையானது. பல இடங்களில் அறுவடை தொடர்ந்த போதிலும் விளைச்சல் குறைவாக இருந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து மிகவும் குறைந்தது.
ஆந்திராவில் தக்காளி விளைச்சல் நன்றாக உள்ளதால் அங்கு தக்காளி வரத்து அதிகம் உள்ளது. வியாபாரிகள் ஆந்திராவுக்கு சென்று தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.
மார்க்கெட்டிற்கு வரத்து குறைவாக இருந்த போதிலும் வியாபாரிகள் ஆந்திராவில் தக்காளியை வாங்குவதால் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து நேற்று கிலோ ரூ.10 க்கு கீழ் விற்பனையானது. பராமரிப்பு செலவு , விவசாய கூலி அதிகரிப்பு காரணமாக தக்காளியை விளைவிக்க அதிகம் செலவாகிறது. தற்போது விற்கும் விலையானது தக்காளியை பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என விவசாயிகள் தெரிவித்தனர்.
கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில், ஆந்திராவில் வியாபாரிகளுக்கு வேண்டிய அளவு தக்காளி கிடைப்பதால் அங்கேயே தக்காளியை கொள்முதல் செய்து கொள்வதால் இங்கு விலை குறைந்துள்ளது என்றார்.

