ADDED : டிச 02, 2024 04:28 AM

ஒட்டன்சத்திரம்: தொடர் மழையால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.47க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, சாலைப்புதுார், அரசப்பபிள்ளைபட்டி, பெரிய கோட்டை, சாமியார்புதுார், காவேரியம்மாட்டி பகுதிகளில் தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது.
சில வாரங்களாக அறுவடை தொடர்ந்ததால் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.25க்கு விற்பனையானது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்தது.
இதனால் விலை திடீரென அதிகரித்து கிலோ ரூ.47க்கு விற்பனையானது.
கமிஷன் கடை உரிமையாளர் ஹரிகரன் கூறுகையில், ''மழை தொடரும் நிலையில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.