ADDED : ஆக 28, 2026 06:44 PM
வடமதுரை, ஆக.29-
ஆந்திரா மாநிலத்தில் தக்காளி உற்பத்தி அதிகமானதால் அய்யலுார் மண்டிகளுக்கு வரத்து குறைவாக இருந்தும் விலை அதிகரிக்காமல் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அய்யலுார் மண்டிகளில் 15 கிலோ வீரிய ரக பெட்டிக்கு ரூ.500 முதல் 600 வரை விலை கிடைத்தது. தற்போது அதே எடை பெட்டிக்கு ரூ.150 முதல் 200 வரையே கிடைக்கிறது.
வியாபாரிகள் கூறுகையில், ‘அய்யலுார் மண்டிகளுக்கு உற்பத்தி உச்சத்தில் நேரங்களில் 100 டன் அளவிற்கு தக்காளி வரத்து இருக்கும். தற்போது 10 டன் அளவிற்கே வரத்து உள்ளது. பொதுவாக வரத்து குறையும் நேரத்தில் விலை கூடும். ஆனால் ஆந்திரா, கர்நாடகா போன்ற பக்கத்து மாநிலங்களில் தக்காளி உற்பத்தி அதிகமாக இருப்பதால் அங்கு விலை குறைந்துள்ளது. அதன் தாக்கம் அய்யலுார் மார்க்கெட்டையும் பாதிக்கிறது’ என்றனர்.
சில்லரை விற்பனையில் கிலோ ரூ.15 அல்லது 20 என விற்கப்படுகிறது. வரத்து குறையும் நேரத்தில் விலை அதிகமாகும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமாக உள்ளது.
