ADDED : நவ 07, 2024 01:58 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவடைந்து கிலோ ரூ.30 க்கு விற்றது.
ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், பாவாயூர், கல்லுப்பட்டி, கேதையுறும்பு காளாஞ்சிபட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, அரசப்பிள்ளைபட்டி சுற்றிய கிராம பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது. அக்டோபரில் ஆந்திரா ,கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மகசூல் பாதிக்க அம் மாநில வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் வந்து தக்காளியை கொள்முதல் செய்து வந்தனர்.
இதனால் தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.60 க்கு விற்பனை ஆனது . தற்போது அந்த மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகரிக்க வியாபாரிகள் இங்கு வரவில்லை.
தமிழக பிற மாவட்ட வியாபாரிகளும் கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விலை குறைவாக இருப்பதால் அங்கு சென்று விட்டனர். இதனால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கி.ரூ. 30க்கு விற்பனையாகிறது.