/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரைகுறை பணிகளால் சுற்றுலா பயணிகள் அவதி; 5 கி.மீ., பரப்புள்ள ஏரியின் இயற்கை சிதைப்பு
/
அரைகுறை பணிகளால் சுற்றுலா பயணிகள் அவதி; 5 கி.மீ., பரப்புள்ள ஏரியின் இயற்கை சிதைப்பு
அரைகுறை பணிகளால் சுற்றுலா பயணிகள் அவதி; 5 கி.மீ., பரப்புள்ள ஏரியின் இயற்கை சிதைப்பு
அரைகுறை பணிகளால் சுற்றுலா பயணிகள் அவதி; 5 கி.மீ., பரப்புள்ள ஏரியின் இயற்கை சிதைப்பு
ADDED : டிச 18, 2024 06:52 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரி நடைமேடை பணி இரு ஆண்டுகளை கடந்தும் மந்தகதியில் நடப்பதால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.
கொடைக்கானல் ஏரியில் ரூ. 24 கோடியிலான வளர்ச்சிப் பணிகள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதில் நடைமேடை, வேலி, அலங்கார மின்விளக்கு புதுப்பிப்பு, படகு குழாம், ஏரியை துாய்மைப்படுத்தும் பயோ பிளாக், ஏரோட்டர், நீருற்று, சைக்கிள், குதிரை சவாரிக்கு என தனி வழித்தடங்கள், பயணிகள் அமரும் நிழற்குடை, பேட்டரி கார் உள்ளிட்ட கவர்ச்சியான அறிவிப்புகள் இடம் பெற்றன.
இதில் சில பணிகள் முழுமை பெற்று எஞ்சிய பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் உள்ளது. 5. கி.மீ., ஏரிச்சாலை துவக்கத்தில் இயற்கை சுற்றுச்சூழலுடன் அழகுற காட்சியளித்தது. எரியை மேம்படுத்தும் பணிகளில் ஆட்சியாளர்கள் மாறி, மாறி நிதிகளை ஒதுக்கி பணிகளை செய்த போதும் வளர்ச்சி என்பது கானல் நீராக உள்ளது. அலங்கோலமாக நகராட்சி நிர்வாகம் மாறும் போது வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் 5 கி.மீ., பரப்புள்ள ஏரியை பாடாய்படுத்தி இயற்கையை சிதைத்துள்ளது மட்டும் நிதர்சனமாக உள்ளது. இது ஒரு புறம் என்றால் நெடுஞ்சாலைத்துறை மழைநீர் வாய்க்கால் என்ற பெயரில் ரோட்டை ஆக்கிரமித்து கட்டமைத்ததால் ஏரி ரோடு சுருங்கியுள்ளது. ஏரிச்சாலை நடைமேடை கொரோனா கால கட்டத்தில் சுற்றுலா நிதியில் புதுப்பிக்கப்பிட்டு நல்ல நிலையில் இருந்தது. இதை அப்புறப்படுத்தி தற்போது கிரானைட் கற்கள் பதிக்கும் பணி என்ற பெயரில் அரைகுறையாக பணிகள் நடந்து அலங்கோலமாக நடந்துள்ளது. பணிகளை கற்கும் புதியவர்களின் பயிற்சி களம் போல் ஏரி நடைமேடை ஒழுங்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளது. தற்போதே கிரானைட் கற்கள் சேதமடைந்தும், மின்விளக்குகள் சாய்ந்தும், எப்.ஆர் பி., வேலிகளில் வெடிப்பு என பணிகள் தரமில்லை.
ஒழுங்கற்ற பணி
இரண்டரை ஆண்டுகளில் ஆங்காங்கே மந்தகதியில் பணிகள் துவங்காது சுற்றுலா பயணிகள் தடுமாறுகின்றனர். வேலி, அலங்கார மின்விளக்கு என முழுமை பெறாமல் ஏரிச்சாலை குப்பை குவியலாக உள்ளது.
ஏரிச்சாலையில் காலை, மாலையில் நடைபயிற்சியில் ஈடுபடும் உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகள் ஒழுங்கற்ற பணி, கட்டுமான குவியல்களால் பாதிக்கின்றனர்.
ஏரிச்சாலையில் குவிக்கப்பட்டுள்ள காட்டுமானப் பொருட்களால் குதிரை, சைக்கிள் சவாரி செய்ய முடியாமல் பயணிகள் நெரிசலில் தவிக்கின்றனர். ஆங்காங்கே குளம் போல் தேங்கும் மழைநீர், சேதமடைந்த படகு குவியல் என ஒட்டு மொத்தமாக ஏரிச்சாலை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பகுதியாக இருந்த நிலை மாறி மன உளைச்சலை ஏற்படுத்தும் பகுதியாக மாறியுள்ளது.
ஆழ்ந்த துாக்கம்
நகராட்சியும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்காது ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளது. சர்வதேச சுற்றுலா தலம் என பெயரில் மட்டும் வைத்துள்ள கொடைக்கானலில் அடிப்படை கட்டமைப்பு அறவே இல்லாத நிலை மட்டும் உள்ளது பயணிகளை கவலையடைய செய்துள்ளது. இனியாவது ஏரி மேம்பாட்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்தியநாதன், கமிஷனர், கொடைக்கானல் : ஏரிச்சாலையில் நடந்து வரும் பணிகள் 2 மாதத்தில் முழுமை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.