/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் கம்பம், மின்ஒயர்களை உரசும் மரக்கிளைகள் ஒட்டன்சத்திரம் நகராட்சி 3 வது வார்டில் தீராத பிரச்னைகள்
/
மின் கம்பம், மின்ஒயர்களை உரசும் மரக்கிளைகள் ஒட்டன்சத்திரம் நகராட்சி 3 வது வார்டில் தீராத பிரச்னைகள்
மின் கம்பம், மின்ஒயர்களை உரசும் மரக்கிளைகள் ஒட்டன்சத்திரம் நகராட்சி 3 வது வார்டில் தீராத பிரச்னைகள்
மின் கம்பம், மின்ஒயர்களை உரசும் மரக்கிளைகள் ஒட்டன்சத்திரம் நகராட்சி 3 வது வார்டில் தீராத பிரச்னைகள்
ADDED : டிச 14, 2024 05:23 AM

ஒட்டன்சத்திரம் : மழைக்காலத்தில் ரோட்டில் தண்ணீர் தேங்குவதால் டூவீலர்களை இயக்க சிரமம், செடி கொடிகள் முளைத்த ஓடை, மின் கம்பம், மின்ஒயர்களை உரசும் மரக்கிளைகள் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 3வது வார்டில் பிரச்னைகள் ஏராளம் உள்ளன.
சங்குபிள்ளைபுதுார், ஏ.பி. காலனி, கே.கே.நகர், ஆர்.எஸ்.பி நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் ஏ.பி. காலனிக்கு ஒதுக்கப்பட்ட மயானத்தில் போதுமான வசதிகளை ஏற்படுத்தி சுற்று சுவர் கட்ட வேண்டும். ஏ.பி.காலனி வடக்கு பகுதியில் சாக்கடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்துள்ளது. இதனை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்குபிள்ளைபுதுாரில் நடுத்தெருவில் மின்கம்பம் உள்ளது. இத்தெருவழியாக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. நீண்ட நாட்களாக உள்ள இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை
சங்குப் பிள்ளை புதுாரில் உள்ள தரை மேல் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்துள்ளது . இதை இடித்து விட்டு வேறு தொட்டி கட்ட வேண்டும். சங்குப் பிள்ளை புதுார் ரோட்டில் மழைதண்ணீர் தேங்குவதால் டூவீலர்களை இயக்க சிரமமாக உள்ளது.கே.கே.நகர் பகுதியில் ரோடு வசதி இல்லை. வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்குகிறது. இப்பகுதி வழியாக செல்லும் ஓடையில் செடி, கொடிகள் முளைத்து ஓடையை மூடி உள்ளது.
தேவை சுற்றுச்சுவர்
வீராங்கன், அ.தி.மு.க., வார்டு செயலாளர்: கே.கே. நகர் பகுதியில் உள்ள ஓடையில் செடிகள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இதனை துார்வார வேண்டும். இங்கு குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் .ஏ .பி காலனி, பெரியாஞ்சிப்பட்டி, நாகணம் பட்டி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
சுத்தம் செய்யப்படாத தொட்டி
எம்.ஆறுமுகம், தேசியவாத காங்., மாவட்ட தலைவர், சங்கு பிள்ளை புதுார்:
வார்டுக்குள் உள்ள சாக்கடைகள் சேதமடைந்துள்ளது. இவற்றை புதிதாக அமைக்க வேண்டும். சங்குபிள்ளைபுதுாரில் தெருவின் நடுவில் மின்கம்பம் இருப்பதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.
இதனை மாற்றி அமைக்க வேண்டும். சங்கு பிள்ளை புதுாரில் தரை மேல் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்து காணப்படுகிறது. அதை இடித்து புதிய தொட்டி கட்டித் வேண்டும்.
குடிநீர் பிரச்னை இல்லை
ரகுபதி ,மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர்: நகராட்சி குப்பை கிடங்கு புதியதாக திறக்கப்பட்டுள்ளதால் குப்பை தேங்குவதில்லை. குடிநீர் பிரச்னையும் இல்லை. ரோட்டை மறைக்கும் வகையில் செடி கொடிகள் முளைத்துள்ளன. இவற்றை வெட்டி அப்புறப்படுத்தி ரோட்டை அளவீடு செய்து போதுமான அளவிற்கு அகலப்படுத்த வேண்டும் . இதேபோல் மின்கம்பங்கள் ,மின்ஒயர்களை உரசும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
செல்வராஜ், கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் பயனாக கே.கே. நகரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்படுகிறது. ஏ.டி.காலனி வடக்கு பகுதியில் புதிதாக சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நகராட்சியின் குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் குப்பை தினமும் அள்ளப்பட்டு வருகிறது. சாக்கடைகள் துார்வாரப்படுகிறது. தெருக்களில் புதிய எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வார்டில் உள்ள பலருக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கே.கே ,நகர் பகுதி மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.