ADDED : ஜூலை 27, 2025 04:24 AM

வேடசந்துார்: இடையில் நிறுத்தப்பட்டிருந்த கோவிலுார் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவங்கியது
கோவிலுார் வேடசந்தூர் வழித்தடத்தில் தங்கச்சியம்மாபட்டி அருகே திண்டுக்கல் கரூர் ரயில்வே லைன் குறுக்கிடுகிறது. இந்த இடத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பணி பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதியில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகன போக்கு வரத்து மாற்றி விடப்பட்டது.
இங்கு சுரங்கப்பாதை பணிகளை மீண்டும் துவக்கி போக்குவரத்தை சீராக்க வேண்டுமென தினமலர் நாளிதழில் ஜூலை 8 ல் செய்தி வெளியானது. இந்நிலையில் ஜூலை 21 இரவு டூவீலரில் வந்தவர் பள்ளத்தில் விழுந்தார். இது குறித்த செய்தியும் வெளியானது.
இதைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் தற்போது சுரங்கப் பாதையின் உள்பகுதியில் வாகன போக்கு வரத்தின் எடையை தாங்கும் வகையில் கம்பிகளை கட்டி காங்கிரீட் போடுவதற்கான பணிகளை துவக்கி உள்ளன. இந்த பாலத்திற்கு உள்பகுதியில் பாலத்தை ஒட்டி காவிரி குடிநீர் குழாய் செல்லும் நிலையில் இந்த குழாய் பாதையை குறிப்பிட்ட துாரத்திற்கு மாற்றி அமைப்பதோடு ரயில்வே சுரங்கப் பாதை பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.