/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொந்தளிப்பு... கோஷங்கள்... வெளிநடப்பு... பாதாள சாக்கடையால் காரசாரமான மாநகராட்சி கூட்டம்
/
கொந்தளிப்பு... கோஷங்கள்... வெளிநடப்பு... பாதாள சாக்கடையால் காரசாரமான மாநகராட்சி கூட்டம்
கொந்தளிப்பு... கோஷங்கள்... வெளிநடப்பு... பாதாள சாக்கடையால் காரசாரமான மாநகராட்சி கூட்டம்
கொந்தளிப்பு... கோஷங்கள்... வெளிநடப்பு... பாதாள சாக்கடையால் காரசாரமான மாநகராட்சி கூட்டம்
ADDED : மே 31, 2025 12:58 AM

திண்டுக்கல்:பாதாள சாக்கடையால் கொந்தளித்த கவுன்சிலர்கள், சி.பி.ஐ., விசாரணை கோரி பா.ஜ., வும், வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி அ.தி.மு.க.,வும் மாநகராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் மேயர் இளமதி ( தி.மு.க.,) தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா (அ.தி.மு.க.,) , கமிஷனர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர். கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் விவாதம்
ஜானகிராமன் (தி.மு.க.,) : சாக்கடையிலிருந்து மண்ணை எடுத்து வெளியே போடுகின்றனர். ஆனால் அள்ளுவதில்லை. கேட்டால் டிராக்டர் இல்லை என்கின்றனர். மழை பெய்தால் எல்லாம் வீடுகளுக்குள் வருகிறது. பொதுமக்கள் அதிருப்தியடைகின்றனர்.
பாஸ்கரன் (அ.தி.மு.க.,) : பாதாளசாக்கடை பணிகளை சரியாக செய்யவில்லை. இதில் புதிதாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் கொண்டு வருகிறீர்கள். மழை, வெயில் என எப்போதுமே பாதாள சாக்கடையால் பெரும் பிரச்னையாக உள்ளது. , அவசர கூட்ட தீர்மானங்களை இன்று தான் வைக்கிறீர்கள். இந்த தீர்மானங்களை உடனே படித்து எப்படி பதில் சொல்வது. அடிமைப்படுத்துகிறீர்களா. வார்டுகளில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கு. ஒன்றிற்கு கூட தீர்வு காணவில்லை.
மேயர் : யாரையும் அடிமைப்படுத்தவில்லை அனைவரும் சமம்தான். தற்போது தீர்மானங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். வார்டு பிரச்னைகள் குறித்து பின்னர் பேசிக்கொள்ளலாம்.
ஜோதிபாசு (மார்க்சிஸ்ட்) : மூன்றரை ஆண்டுகளில் சாக்கடைகளில எந்தவித துார்வாரும் பணியும் நடக்கவில்லை. சாக்கடைகளில் இருந்து மண்ணை அள்ளிப்போட்டு அப்படியே விட்டுச்செல்கின்றனர். 50 பணியாளர்கள் உள்ளனர் என்றால் 48 வார்டில் எப்படி இவர்களை மட்டுமே வைத்து பணிபுரிய முடியும்.
துணை மேயர் பொதுமக்களோ, கவுன்சிலரோ எவரேனும் புகார் அளித்தால் சுழற்சி முறையில் பணியாளர்களை அனுப்பி துார்வாரும் பணிகளை மேற்கொள்கிறோம்.
தனபாலன் ( பா.ஜ.,) : கடந்த ஆட்சியின் போது சாக்கடை துார்வாருதல், மண் அள்ளுதல் போன்ற பணிகளுக்கு புகார் வந்ததும் மொத்தமாக ஆட்கள் சென்று அதனை முடித்துவிட்டு அடுத்த பகுதிக்கு செல்வர். 3 அடி வரை மண் இருக்கிறது. மண் அள்ளும் இயந்திரம் பயன்படுத்தினால் பாதாள சாக்கடை குழாய் உடைகிறது.
மேயர் : இதுபோன்ற பிரச்னைகளை விரைவில் சரிசெய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறேன்.
ராஜ்மோகன் (அ.தி.மு.க.,) : ஆர்.எம்.காலனி 80 அடி ரோட்டில் தெரு விளக்குகளே இல்லை. இருள் சூழ்ந்து உள்ளது. விளக்குகளை நாங்களே வாங்கி தருகிறோம் என்றாலும் அதிகாரிகள் கேட்பதில்லை. அவர்களும் செய்வதில்லை.
கமிஷ்னர் : விரைவில் சரிசெய்யப்படும்.
தனபாலன் ( பா.ஜ.,) : திடக்கிழவு மேலாண்மை திட்டம் தொடர்பான பரப்புரையாளர்களுக்கு வங்கி கணக்கில் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை. பாதி தொகைதான் செல்கிறது. இதனால், மெத்தனபோக்கு உள்ளது.
மேயர் : வங்கி மூலம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வெங்கடேஷன் (தி.மு.க.,) : அரசன்நகர், ஆண்டாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்னை பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. எம்.எஸ்.பி., பள்ளி மைதானத்தில் இந்த கழிவுநீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. தற்காலிகமாக சரிசெய்வது வாடிக்கையாகி வருகிறது .இதற்கான தீர்வுதான் எப்பபோது கிடைக்கும்.
தனபாலன்(பா.ஜ.,): எங்கள் வார்டு பாதாள சாக்கடை பிரச்னைக்காக தொடர்ந்து 3 வருடமாக கத்திக்கொண்டிருக்கிறேன். ஒரு நடவடிக்கையும் இல்லை. முதலில் ஒரு தொட்டி கட்டினர். பின்னர் பத்தாது என 2வது தொட்டி கட்டினர். தற்போது இதுவும் சரிவராது 3 வது தொட்டி அமைக்க வேண்டுமென சொல்கின்றனர்.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஒதுக்கப்படும் நிதி என்ன ஆகின்றதென்பதே தெரியவில்லை. மக்களிடம் பாதாள சாக்கடைக்கான வரிகள் மட்டும் வாங்குகிறீர்கள். ஆனால் முறையாக சரிசெய்வதில்லை. மக்களிடம் மீண்டும் போய் நிற்பது நாங்கள் தான்.இதை தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் என அனைத்து கட்சி கவுன்சிலர்களும் பாதாள சாக்கடை பிரச்னைகள் குறித்து ஒருமித்த குரலில் பேசினர்.
கருப்பையா(செயற்பொறியாளர் ) : பாதாள சாக்கடை போடப்பட்டுள்ள பகுதிகள் முழுவதும் சர்வே செய்துள்ளோம். பல இடங்களில் குழாய்கள் உடைப்பு, அடைப்பு, சேதம், இணைப்பில் சிக்கல் என பல பிரச்னைகள் உள்ளன. இவற்றை முழுவதுமாக ஆய்வு செய்து ரூ.38 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளோம். 2 மாத காலத்தில் பணிகள் தொடங்கும்.
ராஜ்மோகன்(அ.தி.மு.க.,) : தற்போது புதிதாக பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர உள்ளீர்கள். பழைய திட்டப்பணிகளை முடிக்காமல் ஏன் புதிய பணிகளை தொடங்குகிறீர்கள்
முகமது இலியாஸ் (இ.மு.லீக்.,) : தி.மு.க., கவுன்சிலர்கள் மார்த்தாண்டம், ஜானகிராமன் : புதிதாக ரூ.205 கோடி மதிப்பீல் புதிய பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பழைய திட்ட பணிகளை சரிசெய்ய இன்னும் ரூ.38 கோடி தேவை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பழைய பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுமையாக முடித்து விட்டு புதிய திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும் . மாநகராட்சி கூட்டம் இதற்கான உத்தரவத்தை தற்போதே அளிக்க வேண்டும்.
மேயர் : திண்டுக்கல் மாநகராட்சியில் முதல் முறையாக பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க.,ஆனால் அது முடிவடையும்போது ஆட்சி மாற்றம் நடந்தது. பழைய பாதாள சாக்கடை திட்டத்தை சரி செய்ய வேண்டும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.ஆனால் தற்போது புதிய பாதாள சாக்கடை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.
அதனால் இந்த திட்டத்தை எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒரு மனதாக ஏற்க வேண்டும். இருந்த போதும், அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கை ஏற்று திண்டுக்கல் மாநகராட்சியில் தற்காலிகமாக புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது நிறுத்தி வைக்கப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
துணை மேயர் : அ.தி.மு.க., வினர் அதிக வரிவிதிப்பு எனக்கூறி வெளிநடப்பு செய்கின்றனர். ஆனால் இதற்கு காரணமே அ.தி.மு.க., தான். 2014ல் திண்டுக்கல், தஞ்சாவூரை மாநகராட்சிகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தரம் உயர்த்தினார். அதன்பின் வந்த அ.தி.மு.க., வினர் மாநகராட்சி வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை. நாங்கள் அப்போதே வேண்டாமென குரல் கொடுத்தோம். மீறி செய்தனர். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 21 மாநகராட்சியில் 20 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் தற்போது வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வரவில்லை. காரணம் அ.தி.மு.க., தான்.
சுபாஷனி ( தி.மு.க., ): திண்டுக்கல், தஞ்சாவூர் என 2 ம் ஒரே நேரத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அங்கு வரி 7 சதவீதம், இங்கு 27 சதவீதம் ஏன் இந்த வேறுபாடு.
கமிஷனர் : மாநகராட்சி சொத்து வரி, வீட்டு வரி பாதாள, சாக்கடை வரி போன்ற வரிகள் உயர்வை தீர்மானிப்பது அதிகாரிகள் இல்லை. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு.
கணேசன் (மார்க்சிஸ்ட்) : மாநகராட்சி கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றினால் வரியை குறைக்கலாம் .அதிகாரம் உள்ளது.
கமிஷனர் : நிதி வேண்டி திருத்திய திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நிதி வந்தபின் பணிகள் தொடங்கும் குறிப்பாக 2025 க்குள் அதற்கான பணிகள் 100 சதவீதம் தொடங்கப்படும்.