ADDED : ஜூலை 25, 2025 01:35 AM

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே லாரி மோதியதில் வேன் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் தேனியைச் சேர்ந்த டிரைவர் உட்பட இருவர் பலியாயினர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் ரஞ்சித் 45. இவரது வேனில் அதே பகுதியை சேர்ந்த 22 பேர் ஆடி அமாவாசைக்காக ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள நாட்ராயன் கோயிலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அய்யர்மடம் அருகே வந்த போது ரோட்டோர கடையில் டீ குடிக்க திடீரென பிரேக் அடித்து வேனை திருப்பி உள்ளார்.
அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் வேன் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் ரஞ்சித் 45, விவசாயி வாசகர் 70, இறந்தனர்.
வேனில் வந்த பாண்டி 50, பிச்சை 55, முருகானந்தம் 50, தவமணி 60, சிங்கம் 60, ராமராஜ் 70, அழகர் 70, பொம்மையன் 60, முருகன் 55, உள்ளிட்ட 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், தீயணைப்பு அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை துவரம்பள்ளத்தை சேர்ந்த சுரேஷ் 30, போலீசில் சரணடைந்தார்.