/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் மாணவர்களில்லாத அரசு பள்ளிக்கு இரு ஆசிரியர்கள்
/
'கொடை' யில் மாணவர்களில்லாத அரசு பள்ளிக்கு இரு ஆசிரியர்கள்
'கொடை' யில் மாணவர்களில்லாத அரசு பள்ளிக்கு இரு ஆசிரியர்கள்
'கொடை' யில் மாணவர்களில்லாத அரசு பள்ளிக்கு இரு ஆசிரியர்கள்
ADDED : அக் 15, 2024 05:47 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் மாணவர்களின்றி செயல்படாத பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பள்ளி செயல்படுவது போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர்.
கொடைக்கானல் வெள்ளகெவி ஊராட்சியில் உள்ளது பெரியூர் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. கிராமத்திற்கு ரோடு வசதி இல்லாத நிலையில் இங்கு பணி புரியும் ஆசிரியர்கள் பெரியகுளம் உப்புக்காடு பகுதியிலிருந்து வனப்பகுதி மார்க்கமாக நடந்தே பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது.
இப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் ஒரு உதவி ஆசிரியர் என இரு ஆசிரியர்களும், சத்துணவு மையம் உள்ளிட்டவை செயல்படுகிறது.ரோடு வசதி இல்லாத தொலைதுார கிராமத்தில் உள்ள இப்பள்ளிக்கு ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வருவதில்லை என புகார் எழுந்தது.
அதே நிலையில் தற்போது 3 மாணவர்கள் அங்கு பயில்வதாக எமிஸ் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டு கணக்கில் அதிகாரிகள் உடந்தையுடன் கவனிப்பு பெற்றுக் கொண்டு சம்பளம் விடுவிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியூர் கிராமத்தினருக்கு பள்ளி வசதி இருந்தும் ஆசிரியர் வருகை தராத நிலையை கருத்தில் கொண்டு தங்களது குழந்தைகளை பெரியகுளம் தேனி பள்ளியில் சேர்த்துள்ளனர். கல்வித்துறை பதிவேட்டின்படி 3 மாணவர்கள் பயில்வதாக கூறப்படும் பள்ளியில் மாணவர்கள் பதிவு மட்டுமே உள்ள நிலையில் பள்ளி சில ஆண்டாக செயல்படவில்லை.
இருந்தப் போதும் கல்வித்துறை அதிகாரிகள் 3 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு, ஆசிரியர்கள் கிராமத்தில் தங்கி பயிற்றுவித்து பள்ளி செயல்படுவதாக தகவலளிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கடந்த ஒன்றை ஆண்டுகளாக மாணவர்களின்றி சத்துணவு திட்டம் செயல்படுத்தவில்லை என முரண்பட்ட தகவலளிக்கின்றனர். இதில் மாணவர்களே இல்லாத பள்ளியில் இரு ஆசிரியர்களுக்கு ஆண்டு கணக்கில் லட்ச கணக்கில் சம்பளம் மாதந்தோறும் வழங்கப்பட்டுள்ள முறைகேடு அரங்கேறியுள்ளது மட்டும் நிதர்சனமாக தெரிய வருகிறது. தமிழகத்தில் ரோடு வசதியில்லாத தொலைதுார மலைக்கிராமங்களில் பள்ளிகள் சரிவர செயல்படாததற்கு கொடைக்கானல் மலைக்கிராம பெரியூர் பள்ளி உதாரணமாக உள்ளது.
வேதனையாக உள்ளது
ராமசந்திரன், விவசாயி, பெரியூர்: வெள்ளகெவி பெரியூர் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது. சில ஆண்டாக பள்ளி செயல்படுவதில்லை. ஆசிரியர்கள், அதிகாரிகள் பள்ளிக்கு வருவதில்லை. துவக்கத்தில் ஆசிரியர் ஒருவர் மட்டும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று கொடியேற்றுவதற்கு வருவதோடு சரி பிறகு இதுவரை வந்ததில்லை.
ரோடு வசதியில்லாத மலைக்கிராமத்திற்கு பெரியகுளம் உப்புக்காடு பகுதி யிலிருந்து வனப்பகுதி வழியாக 6. கி.மீ., நடந்து கிராமத்திற்கு வரும் நிலை உள்ளது.
தேர்தல் நேரத்தில் கொடைக்கானலிருந்து ஒட்டு இயந்திரங்கள் குதிரை மூலம் கொண்டு வரப்பட்டு வாக்கு பதிவதோடு சரி தங்கள் கிராம பிரச்னைக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
தொலை தொடர்பு, ரோடு வசதியில்லாத கிராமத்தில் அரசு பள்ளியை அமைத்து மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் முயற்சியை செய்தும், தங்களுக்கு பயனின்றி முறைகேடு நடந்துள்ளது வேதனையாக உள்ளது.
இங்கு பள்ளி செயல்படாத நிலையில் தரைப்பகுதியில் உள்ள பெரியகுளம், தேனியில் பொருளாதார இழப்பிற் கிடையே குழந்தைகள் கல்வி பயில்கின்றனர்.
அரசு பள்ளியில் நடந்துள்ள முறைகேடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி செயல்படுவதில்லை
புருசோத்தமன், ஊராட்சி தலைவர்: கடந்த 10 ஆண்டுகளாக பெரியூர் பள்ளி சரிவர செயல்படுவதில்லை. ஏற்கனவே போதிய மாணவர்கள் இல்லாததால் சின்னனுார் துவக்கப்பள்ளி மூடப்பட்டது.
அது போன்ற சூழல் பெரியூர் பள்ளிக்கு வராதிருக்க அதிகாரிகளிடம் ரோடு அமைக்க வலியுறுத்தி வருகின்றோம்.
இப்பிரசினைக்கு ஆசிரியர்கள் பொதுமக்கள் இருவரின் ஒத்துழைப்பு இல்லாததே பள்ளியின் இந்நிலைக்கு காரணம்.
பதிவேட்டில் உள்ளது
பழனிராஜ், வட்டார கல்வி அலுவலர் கொடைக்கானல்: வெள்ளகெவி பெரியூர் அரசு துவக்கப்பள்ளியில் 3 மாணவர்கள் பயில்கின்றனர். எமிஸ் பதிவேட்டில் உள்ளது.
இப்பள்ளி ஆசிரியர்கள் கிராமத்தில் தங்கி பயிற்றுவிக்கின்றனர். 3 மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் செயல்படுகிறது. கடந்தாண்டு பெரியூர் பள்ளியை ஆய்வு செய்ததோடு பின் செல்லவில்லை.
சத்துணவு பொருட்கள் வழங்கவில்லை
பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர், கொடைக்கானல்: பெரியூர் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களில்லாத நிலையில் சத்துணவு பொருட்கள் வழங்கவில்லை.
சில மாதத்திற்கு முன் காலை உணவு திட்டம் குறித்து பள்ளிக்கு சென்ற போது மாணவர்களில்லாத நிலையில் சத்துணவு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் 3 மாணவர்கள் படிப்பதாக கூறுவது வியப்பை அளிக்கிறது. இது கல்வித் துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கலாம்.
ஆசிரியர்களிடம் விசாரணை
ஜான் பிரிட்டோ, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஓட்டன்சத்திரம்: கொடைக்கானல் வெள்ளகெவி பள்ளியில் மாணவர்களில்லாத பள்ளி செயல்பட்டது குறித்து வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.