ADDED : ஜன 21, 2025 06:21 AM
திண்டுக்கல்: 2016ல் நடந்த தேர்தலின்போது திண்டுக்கல்லில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் இரவு 10 :00 மணிக்கு பிறகு பேசியதாக ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் வைகோ ஆஜரான நிலையில் இதன் விசாரணையை பிப்.5க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
திண்டுக்கல் மணிக்கூண்டில் மக்கள் நல கூட்டணி சார்பில் 2016ல் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இரவு 10:00 மணிக்கு மேல் பேசியதாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, மாவட்ட செயலாளர் செல்வராகவன், வி.சி.க.,மைதின்பாவா உட்பட கூட்டணி கட்சியினர் 12 பேர் மீது திண்டுக்கல் வடக்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதன் வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்தது. இதை தள்ளுபடி செய்ய வைகோ, செல்வராகவன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை திண்டுக்கல் ஜே.எம்.2ல் 4 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது
அதன்படி 2024 டிச.13ல் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உட்பட 12 பேரும் திண்டுக்கல் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜராகினார். விசாரணையை 2025 ஜன.7க்கு நீதிபதி சவுமியா மேத்யூ ஒத்திவைத்தார். ஜன.7 ல் வைகோ ஆஜராகாததால் விசாரணையை ஜன.20க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினார். விசாரணையில் கூடுதல் நேரம் பேசவில்லை என வைகோ மறுப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கின் விசாரணை பிப்.5க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

