/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொற்று சூழலில் தத்தளிக்கும் கிராமங்கள்; குட்டத்துப்பட்டி ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
/
தொற்று சூழலில் தத்தளிக்கும் கிராமங்கள்; குட்டத்துப்பட்டி ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
தொற்று சூழலில் தத்தளிக்கும் கிராமங்கள்; குட்டத்துப்பட்டி ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
தொற்று சூழலில் தத்தளிக்கும் கிராமங்கள்; குட்டத்துப்பட்டி ஊராட்சியில் நீடிக்கும் அவலம்
ADDED : ஆக 19, 2025 01:03 AM

கன்னிவாடி; குட்டத்துப்பட்டி ஊராட்சியில் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரமற்ற சூழல் பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சியில் 10க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்தபோதும் வசதிகளில் மிகவும் பின்தங்கி உள்ளன.
தண்ணீர், சாக்கடை, ரோடு வசதி போதுமானதாக இல்லை. தெருக்கள் தோறும் தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு, தொற்று நோய் பாதிப்பு பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.
புளியராஜக்காபட்டி, குஞ்சனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, காலாடிபட்டி, நாச்சக்கோணான்பட்டி, புஷ்பபுரம் உட்பட பல இடங்களில் குடிநீர் வினியோக குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது. சாக்கடை இல்லாமல் மழைநீர் தண்ணீருடன் வீடுகளை சூழ்ந்துள்ளது.
பல கிராமங்களில் குடிநீர் வினியோக குளறுபடி, சாக்கடை பராமரிப்பு பெயரளவில் கூட இல்லை.
சகதிக்காடான தெருக்கள்தோறும் தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு தொற்று நோய் பாதிப்பு பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.
மயானங்களில் அடிப்படை வசதிகள், அவற்றுக்கான ரோடு, ஆக்கிரமிப்புகள், எரியாத தெருவிளக்கு, திட்ட பணிகளில் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலை, மகளிர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக உறவினர்கள் அதிகாரம் காட்டுதல் என குவியும் புகார்களுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
அலட்சிய அதிகாரிகள் ஐயப்பன், பா.ஜ., ஒன்றிய தலைவர், ரெட்டியார்சத்திரம் : உள்ளாட்சி பிரதிநிதியாக மகளிர் தேர்வு செய்யப்பட்ட போதும், உறவினர்களே நேரடி அதிகாரம் செலுத்தினர். மன்ற கூட்டம், திட்ட பணிகள் தேர்வு, அதிகாரிகள் சந்திப்பு, அலுவலக, ஊராட்சி நிர்வாகம் போன்றவற்றில் நேரடி தலையீடு உள்ளது.
புகார்கள் தொடர்ந்தபோதும் அவற்றை அதிகாரிகள் அலட்சியப்படுத்தினர். பதவி காலம் முடிந்து 8 மாதங்களாகியும் அடிப்படை வசதிகள் அளிப்பதில் வளர்ச்சி துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
புளியராஜக்காபட்டி, குஞ்சனம்பட்டி, கு.ஆவரம்பட்டி, அனுப்பபட்டி உட்பட பல இடங்களில் சுகாதாரம் படுமோசமாக உள்ளது.
--தொடரும் மண் திருட்டு விஜயகுமார், சி.ஐ.டி.யூ., ஒன்றிய நிர்வாகி, புளியராஜக்காபட்டி: முத்தனம்பட்டி கண்மாய், சிட்டன் கண்மாய் உள்ளிட்ட இடங்களில் வேளாண்பணி பெயரைக்கூறி வண்டல் மண் மட்டுமின்றி கிராவல் மண் திருட்டு தாராளமாக நடக்கிறது.
முற்றுகையிடும் நேரத்தில் சீட்டு அனுமதி பெற்று எடுப்பதாக கூறுகின்றனர். வருவாய், போலீஸ், கனிமவள துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
கண்மாய்களில் படுபாதாள குழிகள் பரவி கிடக்கிறது. கன்னிவாடி நாயோடை நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வருவதற்கான வழித்தடம் தூர்ந்து கிடக்கிறது. வேளாண்மை மட்டுமின்றி நிலத்தடி நீர் ஆதாரமும் பாதித்துள்ளது.
ஊராட்சியின் பிற கிராமங்களிலும் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளதால் பெண்கள், முதியோர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
மாணவர்கள் அலைக்கழிப்பு முத்துகிருஷ்ணன், விவசாயி, குட்டத்துப்பட்டி: பள்ளி நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. மாணவர்கள், கூலித்தொழிலாளிகள் அலைக்கழிப்பிற்கு உள்ளாகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து முத்தனம்பட்டி, புளியராஜக்காபட்டி, குஞ்சனம்பட்டி, கோனுார், கசவனம்பட்டி வழியே கன்னிவாடிக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கினால் உதவியாக இருக்கும். மாங்கரை பிரிவு, புளிராஜக்காபட்டி ரோடுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு முட்செடிகள் அடர்ந்துள்ளன.
மைலாப்பூர்- காமாட்சிபுரம் ரோடு பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடந்தது. சில மாதங்களுக்கு முன் சீரமைப்பு துவக்கினாலும் ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் மெட்டல் கூட அமைக்கவில்லை. மழை நேரங்களில் சகதி நிரம்பி டூவீலர்கள் மட்டுமின்றி பாதசாரிகள் கூட கடந்து செல்ல முடியாத அவலம் உள்ளது .
-