/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விழுப்புரம்-ராமேஸ்வரம் கோடை ரயிலுக்கு வாய்ப்பு
/
விழுப்புரம்-ராமேஸ்வரம் கோடை ரயிலுக்கு வாய்ப்பு
ADDED : ஏப் 14, 2025 05:45 AM
வடமதுரை: கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை கோட்ட அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் ரயில்களில் பயணிக்க துவங்கியுள்ளனர்.
பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு விழுப்புரத்தில் இருந்து மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு ஏப்., 19 முதல் மே 31 வரை வாரத்தில் 3 நாட்கள் வீதம் 19 சிறப்பு ரயில்களை இயக்க அதிகாரிகள் பரிந்துரை அனுப்பியுள்ளனர்.
அதன்படி சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் விழுப்புரத்தில் அதிகாலை 4:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருச்சியில் காலை 6:40 மணி, திண்டுக்கல்லில் காலை 7:50 மணி, மதுரையில் காலை 9:10 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு காலை 11:40 மணிக்கு சென்றடையும்.
அதே நாட்களில் மதியம் 1:45 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் மதுரையில் மாலை 4:10 மணி, திண்டுக்கல்லில் மாலை 5:00 மணி, திருச்சியில் மாலை 6:15 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு இரவு 8:45 மணிக்கு சென்றடையும்.
16 சதாப்தி ரக ரயில் பெட்டிகளை கொண்ட முன்பதிவு ரயிலாக இயக்கலாம் எனவும், ரயில்வே நிர்வாக ஒப்புதல் கிடைத்ததும் ஒரிரு நாளில் இந்த சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.