/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீணாகும் குடிநீர்... ; வசதி இல்லா பஸ் ஸ்டாண்ட்; பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு மக்கள்
/
வீணாகும் குடிநீர்... ; வசதி இல்லா பஸ் ஸ்டாண்ட்; பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு மக்கள்
வீணாகும் குடிநீர்... ; வசதி இல்லா பஸ் ஸ்டாண்ட்; பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு மக்கள்
வீணாகும் குடிநீர்... ; வசதி இல்லா பஸ் ஸ்டாண்ட்; பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 21வது வார்டு மக்கள்
ADDED : பிப் 02, 2025 04:29 AM

திண்டுக்கல் : சேதமான ரோடுகள், மழை நேரத்தில் வீடுகளுக்குள் புகும் கழிவுநீர், துார்வாரப்படாத சாக்கடை , அடிப்படை வசதிகள் இல்லாத பூ மார்க்கெட், நடுரோட்டில் டிரான்பார்ம்கள், குறுகலான தெருக்கள், என ஏராளமான பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநராட்சி 21 வது வார்டு மக்கள்.
இ.பி.காலனி, ஸ்பென்சர் காலனி, வடக்கு சவுராஷ்டிராபுரம், சவுராஷ்டிரா காலனி, ராமசாமி காலனி, ஸ்பென்சர் காம்பவுண்ட் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்தவார்டில் இரவு மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் கடிக்கும் கொசுக்களால் மக்கள் பாதிக்கின்றனர் . தண்ணீர் குழாய் அமைக்க ரோடை சேதமாக்கியதோடு அதை சீரமைக்காமல் அப்படியே விட்டு செல்வதால் தோண்டப்பட்ட இடங்கள் ஆண்டுக்கணக்கில் சேதமாகவே உள்ளது. இரவில் டூவீலர்களில் வருவோர் தடுமாறுகின்றனர்.
மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு துணைபோகும் நிலை தொடர்கிறது. மழை பெய்தாலே மழை நீரோடு கழிவுநீரும் வீட்டிற்குள் புகுந்து மக்களை பாடாய்படுத்துகிறது. பல ஆண்டுகளாக துார்வாராத சாக்கடைகளால் எந்நேரமும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
இதன்மூலமும் தொற்றுகள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நடுரோட்டில் அகற்றபடாமல் நிற்கும் டிரான்ஸ்பார்மரால் வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர். சில நேரங்களில் விபத்துக்களும் நடக்கின்றன. இங்கு நடக்கும் பிரச்னைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். பூ மார்க்கெட்டில் வசதிகள் எதுவுமே இல்லை. வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைத்தபோதிலும் நடவடிக்கை இல்லை. பஸ் ஸ்டாண்டை அதிகாரிகள் மறந்தே விடுகின்றனர். எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் பிரச்னைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
குடிநீர் வீணாகிறது
ராம்கண்ணன், எலக்ட்ரிக் கடை உரிமையாளர், வடக்கு சவுராஷ்டிரா புரம்: தெருக்களில் புதிதாக அமைக்கப்படும் ரோடு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. குழிகளில் நீர் தேக்கங்களினால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
விபத்துகளும் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால்,பாதாள சாக்கடை நீர் வாட்டத்திற்கு ஏற்றார் போல் அமைக்கப்படுவதில்லை. அதனால் மழை நீரும் கழிவு நீரும் பின்னே வருகிறது. ஒரு சில வீடுகளிலும், தெருக்களிலும் கழிவு நீர் தேங்குகிறது. குடிநீர் பைப்புகள் பராமரிக்காது சேதமாகி உடைந்து குடிநீர் வீணாகிறது.
கொசு தொல்லை
மணிவண்ணன், தொழிலாளி, வடக்கு சவுராஷ்டிராபுரம்: தெருக்களில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது. தொடர்ந்து இதேநிலை நீடிப்பதால் கொசுக்கள் அதிகளவில் பரவி உள்ளது.
கொசு மருந்தும் பல மாதங்களாக அடிக்காமல் இருப்பதால் சொல்லவே முடியாத அளவிற்கு கொசுக்கள் தொல்லை உள்ளது. மக்களும் வீட்டில் இருந்தபடி வேதனைப்படுகின்றனர். வாரத்திற்கு இருமுறை கொசு மருந்து அடிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகள் அதிகம்
நாகராஜ், கடை உரிமையாளர், பொன்னப்பநாடார் தெரு: பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களும் ஏற்படுகிறது. பொது கழிப்பறைகளை பராமரிக்காததால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பாக மாறி விடுகிறது. திருநங்கைகளினால் வெளியூர் பயணிகளுக்கு அதிக அளவில் தொந்தரவுகள் ஏற்படுகிறது. போலீசார் இதை கட்டுப்படுத்த வேண்டும்.
கேமராக்கள் அமைப்பு
கார்த்திக், கவுன்சிலர், (காங்.,): சவுராஷ்டிரா காலனியில் புது ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கீம் ரோடு பகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்துள்ளது. மழை நீர் வடிகால் கட்டும் பணிகள் நடக்கிறது. வார்டு முழுவதும் 136 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்து சொல்ல தான் செய்கிறேன். நடவடிக்கை எடுக்கிறோம் என சொல்கின்றனர். எதையும் செய்வதில்லை.சேதமான ரோடுகளும் சீரமைக்கப்படும் என்றார்.