/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்ணீர் தேங்கும் கரூர் ரோடு ரயில்வே சுரங்கப்பாதை
/
தண்ணீர் தேங்கும் கரூர் ரோடு ரயில்வே சுரங்கப்பாதை
ADDED : மார் 07, 2024 06:22 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே புதிதாக திறக்கப்பட்ட பழைய கரூர் ரோடு ரயில்வே சுரங்க பாதையில் எந்நேரமும் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வெயில் நேரத்திலேயே இந்த அளவிற்கு தண்ணீர் தேங்குகிறது என்றால் மழை நேரத்தில் அவ்வளவு தான் எனவும் சிலர் யோசித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் முன் வர வேண்டும்.
திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே பழைய கரூர் ரோடு செல்லும் ரயில்வே சுரங்கபாதை 5 ஆண்டுகளுக்கு மேலாக கட்டும் பணிகள் நடந்தது. பழைய கரூர் ரோட்டிற்கு செல்வோர் திருச்சி ரோடு காந்திஜி நகர் வழியாக 2 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்தது. அதேபோல் கரூர் ரோட்டிலிருந்து திண்டுக்கல் நகருக்குள் வருவோரும் அங்கிருந்து காந்திஜி நகர் வழியாக வரும் நிலை இருந்தது.
பழைய கரூர் ரோடு செல்லும் சுரங்கபாதை பணிகள் 2 வாரங்களுக்கு முன் முடிந்தது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் சுரங்கபாதையை திறக்க நாட்கள் நீடிக்கும் என்பதால் தாமாகவே திறந்து அவ்வழித்தடத்தில் பயணிக்க ஆரம்பித்தனர். இதனால் அதிகாரிகளும் அடிக்கடி சுரங்கபாதையை பேரிக்கார்டுகள் அமைத்து மூடி வைத்தனர். இருந்தபோதிலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் பேரிக்கார்டை அகற்றிவிட்டு இயல்பாக வாகனங்கள் செல்லும் வகையில் தங்கள் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
இங்கு முக்கிய பிரச்னையாக சுரங்க பாதையின் நடு பகுதியில் 2 அடி அளவிற்கு பள்ளங்கள் உள்ளது. இதில் தண்ணீர் எப்படியோ கசிந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் எந்நேரமும் தேங்கியிருக்கும் நிலை உள்ளது. சுரங்கபாதை வழியாக செல்வோர் அந்த பள்ளத்தை தாண்டி தான் செல்ல வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி வெயில் நேரத்திலே இந்த அளவிற்கு தண்ணீர் தேங்குகிறது. மழை நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பயணிக்கின்றனர். இதோடு மட்டுமில்லாமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இத்தனை ஆண்டுகளாக பணிகள் செய்துள்ளனர். இருந்தாலும் ஆங்காங்கே விரிசல்கள்,தண்ணீர் தேங்கியிருப்பது போன்ற பிரச்னைகள் உள்ளது. இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் இரவில் பள்ளத்தில் தடுமாறி விழும் நிலையும் உள்ளது. சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் வெயில் காலத்திலேயே தண்ணீர் வராமல் தடுப்பதற்குண்டான பணிகளை செய்ய வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீர் வராமல் தடுக்க தற்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.
விபத்து ஏற்படும் அபாயம்
பாலசந்தர்,வழக்கறிஞர்,திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி ரோட்டிலிருந்து பழைய கரூர் ரோடு செல்லும் ரயில்வே சுரங்க பாதை பல ஆண்டுகளாக பணி நடந்து கொண்டே இருந்தது. தற்போது முடிந்த நிலையில் முழுமையாக முடியாமல் வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்கும் வகையில் உள்ளது. நடு பகுதியில் பெரிய பள்ளங்கள் உள்ளது. இதை தாண்டி வாகனங்கள் செல்லும்போது பெரியளவில் வாகனங்களே குலுங்குகிறது. லோடு வண்டிகள் தடுமாறி கீழே தடுமாறும் நிலை ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக பணிகள் நடந்தும் முறையாக செய்து முடிக்கவில்லை என மக்கள் புலம்புகின்றனர். இதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.
கால்வாய் அமைக்கவில்லை
சண்முகம்,செயலாளர், ரியஸ் எஸ்டேட் அசோசியேஷன்,திண்டுக்கல்; பழைய கரூர் ரோடு ரயில்வே சுரங்க பாதையை பொருத்த மட்டில் ரயில்வே,நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் முறையாக திட்டமிடவில்லை. இதனால் தான் தற்போது திறந்த உடன் தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது. அதாவது தண்ணீர் வருகிறது என்றால் அதை வெளியேற்ற அவர்கள் கால்வாய் அமைக்க வேண்டும். இங்கு கால்வாய்கள் அமைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. மழை நேரத்தில் பெரும் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
தீர்வு
திண்டுக்கல் திருச்சி ரோட்டிலிருந்து பழைய கரூர் ரோட்டிற்கு செல்லும் ரயில்வே சுரங்கபாதையில் தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும். பள்ளம் இருப்பதால் தான் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது.
இரவில் உள் பகுதியில் மக்கள் நடந்து செல்லும் வகையில் லைட்டுகள் அமைக்க வேண்டும். வெயில் காலம் முடிவதற்குள் சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தினால் மழை நேரத்தில் தண்ணீர் சுரங்க பாதையில் தேங்குவதை தடுக்கலாம். அதிகாரிகளும் இந்த பிரச்னை மீது கவனம் செலுத்த வேண்டும்.

