/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வறட்சியிலும் கை கொடுத்த தர்பூசணி
/
வறட்சியிலும் கை கொடுத்த தர்பூசணி
ADDED : மார் 13, 2026 06:49 AM

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே பாலப்பன்பட்டியில் விவசாயி தர்பூசணி சாகுபடி செய்து அதிக லாபம் பெற்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பாலப்பன்பட்டி பகுதியில் 10 ஏக்கருக்கு மேல் தர்பூசணி நடப்பட்டுள்ளது. பாலப்பன்பட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னச்சாமி ஒரு ஏக்கரில் தர்பூசணி நடவு செய்து ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார்.
65 நாட்கள் பின் அறுவடையின் போது 12 டன் வரை மகசூல் கிடைத்தது. இதனை கிலோ ரூ.13 க்கு விற்பனை செய்ததின் மூலம் ரூ.1.56 லட்சம் வருவாய் கிடைத்தது. இரண்டாம் அறுவடையின் போது 5 டன் வரை மகசூல் கிடைத்தது. மற்ற காய்கறிகள் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வருவாயை கொடுக்காத போதிலும் வறட்சியான இந்த காலகட்டத்திலும் தர்பூசணி கை கொடுத்துள்ளது.
விவசாயி சின்னச்சாமி கூறியதாவது: இப்பகுதியில் போதிய மழை பெய்யாமல் போனதால் வறட்சியாக உள்ளது. போர்வெல்களில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி சொட்டு நீர் பாசனம் மூலம் ஒரு ஏக்கரில் தர்பூசணி நடவு செய்தேன். ஏக்கருக்கு 22 டன் வரை மகசூல் கிடைக்க வேண்டும்.
முதல் அறுவடையில் எதிர்பார்த்தபடி 12 டன் வரை மகசூல் கிடைத்தது. அறுவடையின் போது தர்பூசணி கிலோ ரூ.13 க்கு விற்பனை ஆனது. தற்போது கிலோ ரூ. 9க்கு மட்டுமே விற்கிறது.
இரண்டாம் அறுவடையின் போது 10 டன் வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்தேன் .
ஆனால் 5 டன் தான் கிடைத்தது. வேளாண் அதிகாரிகள் தர்பூசணி நடவு குறித்து போதிய ஆலோசனை வழங்கியிருந்தால் இரண்டாம் அறுவடையின் போதும் நல்ல மகசூல் கிடைத்திருக்கும் என்றார்.

