/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அகலமாக்கப்பட்ட ரோட்டில் அகலாத விபத்து அபாயங்கள்
/
அகலமாக்கப்பட்ட ரோட்டில் அகலாத விபத்து அபாயங்கள்
ADDED : செப் 28, 2024 04:22 AM

வடமதுரை : வடமதுரை -எரியோடு இடையே ரோட்டின் கீழ் செல்லும் காவிரி குழாய் பாதை அடிக்கடி உடைந்து ரோடு சேதமாகும் நிலையில் அதற்கு தீர்வு ஏதும் காணாமல் ரோடு விரிவாக்க பணி நடப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வடமதுரை பகுதிக்கான முதல் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் கரூர் - திண்டுக்கல் பாதையில் எரியோட்டில் இருந்து பிரிக்கப்படுகிறது. எரியோடு - அய்யலுார் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய் பாதை மூலம் வடமதுரை இணைப்பு ரோடு வழியே ஒட்டன்சத்திரம் - வடமதுரை ரோடு வழியே வடமதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒட்டன்சத்திரம்- வடமதுரை மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்படுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக குழாய் பதிக்கும் பணி நடந்ததால், பல இடங்களில் ரோட்டின் விளிம்பில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன. மாநில நெடுஞ்சாலையாக மாற்றும் பணி நடந்தபோது பல இடங்களில் குழாய் பாதை, கேட் வால்வுகள் மூடப்பட்டு ரோடு அகலமாக்கப்பட்டது. இதனால் சில ஆண்டுகளாக எரியோடு -- வடமதுரை இடையே ரோட்டில் ஆங்காங்கே குழாய் உடைந்து நீர் கொப்பளிக்கிறது. இவ்விடங்களில் குடிநீர் வாரிய அதிகாரிகள் பள்ளம் தோண்டி உடைப்பை சரி செய்கின்றனர்.
ஆனாலும் நிரந்தர தீர்வாக இல்லாமல் மீண்டும் அதே பகுதியில் உடைப்பு ஏற்படுகிறது.
தொடர் நீர் கசிவால் ரோட்டில் பள்ளம் தோன்றுகிறது. பள்ளம் குறித்து அறியாது வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். தற்போது வடமதுரையில் துவங்கி ஒட்டன்சத்திரம் வரை ரோடு அகலமாக்கும் பணி நடந்து வரும் நிலையில் ரோட்டின் கீழாக செல்லும் காவிரி நீர் குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க எந்தவொரு மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
--12 ஆண்டுகளுக்கு மேலாக
எம்.ராமர், முன்னாள் தி.மு.க., ஒன்றிய செயலாளர், வடமதுரை :வடமதுரை பகுதியினர் வேடசந்துாரில் இயங்கும் தாலுகா அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தும் முக்கிய ரோடு, இதுதவிர ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் செல்வதற்கும் விவசாயிகள் இவ்வழியே செல்கின்றனர். தற்போது இந்த ரோடு அகலமாவது வரவேற்கதக்கது.
அதே நேரம் இத்தடத்தில் 3 இடங்களில் 12 ஆண்டுகளுக்கு மேலாக ரோட்டின் கீழ் பதிக்கப்பட்டுள்ள காவிரி குடிநீர் உடைந்து ரோடு சேதமடைவதும், பள்ளம் ஏற்பட்டு விபத்துகளை உருவாக்குவதும் பெரிய சிக்கலாக நீடிக்கிறது. இதையும் கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
அவசியம் தொழில் நுட்ப பணி
கே.அருள்குமார், தொழில் அதிபர், வி.குருந்தம்பட்டி: திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களை சேர்ந்த பழநி முருக பக்தர்களது வாகனங்கள் அதிகளவில் இந்த வழியே செல்கின்றன. இவ்வாறு பல வகையிலும் முக்கியத்துவம் பெறும் இந்த ரோட்டின் கீழே பதிக்கப்பட்டுள்ள காவிரி குழாய்களுக்குரிய காற்று போக்கி வால்வுகள் அகற்றப்பட்டதால் குழாய் உடைப்பு தொடர் கதையாக உள்ளது. ரோட்டின் கீழ் குழாய் உடைப்பு பிரச்னையை தீர்க்கும் நோக்கில் அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக பணிகளை செய்ய வேண்டும்.
விபத்துக்களை தடுங்க
ஜி.நாகேந்திரன், வரலாற்று ஆய்வாளர், வடமதுரை: கடந்த காலங்களில் குழாய் உடைப்பால் ஏற்பட்ட பள்ளங்களில் விபத்துகள் நடந்து பல உயிர் இழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து வாழ்க்கையை தொலைந்துவிட்டு பரிதவிக்கின்றனர்.
இந்த ரோட்டின் கீழ் பதிக்கப்பட்டுள்ள காவிரி குழாய் பாதைக்கு பதிலாக தேவைப்படும் பகுதிகளில் மட்டுமாவது புதிய குழாய் பாதை அமைத்து ரோடு சேதமடைவதையும், அதனால் ஏற்படும் விபத்துகளையும் தடுக்க வேண்டும்.