/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண் வழக்கறிஞர் - பழநி கோயில் பணியாளர் பிரச்னை
/
பெண் வழக்கறிஞர் - பழநி கோயில் பணியாளர் பிரச்னை
ADDED : ஜூலை 15, 2025 03:59 AM
திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்ற பெண் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் பொய் புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசை கண்டித்தும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநி முருகன் கோயிலுக்கு வழக்கறிஞர் பிரேமலதா குடும்பத்துடன் தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது கோயில் தற்காலிக பாதுகாவலர், கோயில் அதிகாரிகள் வழக்கறிஞரை ஆபாசமாக பேசி தாக்கி காயம் ஏற்படுத்தியதாக பாதுகாவலர் உட்பட 4 பேர் மீது பழநி போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார் பாதுகாவலரை கைதுசெய்தனர். மற்ற 3 பேர் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர்.பாதுகாவலரை தாக்கிய பெண் வழக்கறிஞர், அவரின் சகோதரி மீது தற்காலிக பணியாளர்கள் பழநி போலீசில் புகார் செய்தனர். அதன்படி வழக்கறிஞர் பிரேமலதா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே கோயில் பணியாளர்களிடம் பொய் புகார் வாங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர், அவரின் சகோதரி மீது பதியப்பட்ட வழக்கை திரும்பபெற வேண்டும், பெண் வழக்கறிஞர் புகாரில் கூறி உள்ள மற்ற 3 பேரையும் கைது செய்யவேண்டும், தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஒருநாள் நீதிமன்றம் பணிப்புறக்கணிப்பு செய்ய பழநி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நேற்று ஒருநாள் நீதிமன்றம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.