ADDED : செப் 07, 2026 11:44 PM
சாமிநாதபுரம், செப்.8-
பழநி அருகே தாளையம் ஊராட்சி நாகூர் கிராம பெண்கள் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட முயன்றனர்.
தாளையம் ஊராட்சி நாகூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு மேல் குடிநீர் விநியோகம் இல்லாததால் இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கோவை -பழநி சாலையில் நாகூர் பிரிவு அருகே மறியலில் ஈடுபட திரண்டனர்.
தகவலறிந்த சாமிநாதபுரம் போலீசார் அங்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி மறியலில் ஈடுபடாமல் தடுத்தனர். ஊராட்சி செயலர் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
