/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
/
மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
ADDED : அக் 27, 2024 01:55 AM
செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த சாயப்பட்டறை தொழிலாளி எஸ்.பாறைப்பட்டியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பலியானார்.
சின்னாளபட்டி அருகே ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கர்ணன் 33. திருமணம் ஆகவில்லை. சாயப்பட்டறையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அக். 24ல் இதே பகுதியை சேர்ந்த விஜயகாந்த் 34, ராஜபாண்டி 33, பிரபு 32, குபேந்திரன் 34, குமரேசன் 40, ஆகியோருடன் முயல் வேட்டைக்காக எஸ்.பாறைப்பட்டி பகுதிக்கு சென்றார்.
பைபாஸ் ரோடு அருகே முயலை விரட்டி சென்ற போது கர்ணன் அங்குள்ள பாலு என்பவரது வயலில் புகுந்தபோது மின்வேலியில் சிக்கி இறந்தார். இரவு நேரம் என்பதால் அவருடன் சென்றவர்கள் அவரை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று மக்காச்சோள வயலில் இறந்து கிடந்ததை கண்டனர்.
செம்பட்டி போலீசார் கூறுகையில்'வண்ணம்பட்டியை சேர்ந்த சேகருக்கு சொந்தமான தோட்டம் எஸ்.பாறைப்பட்டியை அடுத்த பைபாஸ் ரோட்டில் உள்ளது. இதை அதே பகுதி பாலு குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறார். காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அனுமதியின்றி மின் வேலி அமைத்துள்ளார்.இதில் சிக்கி கர்ணன் இறந்தார்' என்றனர்.