/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
3 மாதங்களாகியும் அகற்றப்படாத யாகசாலை கட்டமைப்பு; ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் வசூல்
/
3 மாதங்களாகியும் அகற்றப்படாத யாகசாலை கட்டமைப்பு; ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் வசூல்
3 மாதங்களாகியும் அகற்றப்படாத யாகசாலை கட்டமைப்பு; ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் வசூல்
3 மாதங்களாகியும் அகற்றப்படாத யாகசாலை கட்டமைப்பு; ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் வசூல்
ADDED : ஜூலை 16, 2025 07:23 AM

ரெட்டியார்சத்திரம்; ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 3 மாதங்களாகியும் கட்டமைப்புகள் அகற்றப்படவில்லை. ரோட்டில் நிறுத்தும் வாகனங்களுக்கும் கட்டண வசூல் நடப்பதால் பக்தர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தபுள்ளி அருகே திண்டுக்கல்-பழநி ரோட்டில் பழமை வாய்ந்த செங்கமலவல்லி சமேத கதிர் நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. ஏப். 4ல் கும்பாபிஷேகம் நடந்தது.
கோயில் முன்பு யாகசாலை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டது. கோயிலின் முன் பகுதியில் அமைக்கப்பட்ட யாகசாலை பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்தது. இதற்காக ஏலதாரர் மூலம் கட்டண வசூலும் நடைமுறையில் உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்து 3 மாதங்கள் கடந்த போதும் யாகசாலை கட்டமைப்புகள் அகற்றப்படவில்லை. கும்பாபிஷேக பணிக்காக அமைக்கப்பட்ட யாகசாலை கட்டமைப்புகள் சிதிலமடைந்த நிலையில் கிடக்கின்றன. இதையடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் வேலம்பட்டி ரோடு திண்டுக்கல் பழநி ரோடு உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்படுகின்றன. பாதுகாப்பற்ற விபத்து அபாய சூழலில் வாகனங்கள் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கும் கட்டண வசூல் நடப்பதால் பக்தர்கள் பாதிப்பு தொடர்கிறது.அறநிலையத்துறை அதிகாரிகள் இப்பிரச்னையில் பக்தர்களின் அவதியை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
--நடவடிக்கை எடுங்க
க.உமாமகேஸ்வரி, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் : ஆன்மிக தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோவில்களில் இக்கோயில் முதலிடம் பெறுகிறது. கோபிநாத சுவாமி கோயிலின் உபகோயிலான இங்கு சனிவார நாட்கள் மட்டுமின்றி பெருமாளுக்கு உகந்த அனைத்து நாட்களிலும் சமீப காலமாக பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதற்கேற்ப இங்கு குடிநீர், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இவற்றிற்கான வசதிகள் இருந்தபோதும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அதிகாரிகளின் அலட்சியம் நீடிக்கிறது.
யாகசாலை கட்டமைப்புகள் அகற்றப்படாமல் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை ரோட்டோரங்களில் ஆக்கிரமித்து நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் திண்டுக்கல் -பழநி ரோட்டில் விசேஷ நாட்களில் நெரிசல், விபத்து அபாயம் ஏற்படுகிறது. இதனை அப்புறப்படுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை இல்லை
சென்றாயப்பெருமாள், விவசாயி, சிறுநாயக்கன்பட்டி : உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட பக்தர்களும் ஏராளமானோர் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இருந்தும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
யாகசாலை கட்டமைப்புகள் 3 மாதங்களுக்கு மேலான போதும் அகற்றப்படாமல் புதர் மண்டி செடிகள் அடர்ந்து வளர துவங்கி உள்ளன. ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் கோயில் ஏலதாரர் சார்பில் கட்டண வசூல் நடக்கிறது. சில நேரங்களில் உரிய டோக்கன் வழங்கப்படாமல் கூடுதல் கட்டண வசூல் புகார் நீடிக்கிறது. பலமுறை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.