ADDED : ஆக 04, 2025 04:32 AM
திண்டுக்கல்: -திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே, கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற இளைஞர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தார்.
திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனியை சேர்ந்தவர் நுார் முகமது. இவரின் மகன் சேக் அப்துல்லா 20, செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த இவர், நண்பர்களுடன் குளிப்பதற்காக குஜிலியம்பாறை ரோடு ஆர்.வி.எஸ்.,கல்லூரி அருகே உள்ள கிணற்றுக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் இடுப்பில் கயிறுக்கட்டிக்கொண்டு கிணற்றின் ஓரமாக அமர்ந்து குளித்திருக்கிறார். அதேசமயம், கிணற்றுக்குள் நண்பர்கள் தண்ணீரில் மூழ்கி விளையாடி கொண்டிருப்பதை பார்த்து ஆசைப்பட்ட சேக் அப்துல்லா, மெல்ல தண்ணீருக்குள் இறங்கி குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அவிழ்ந்ததில் அவர் மூழ்கினார். இதை கவனிக்காத நண்பர்கள், சேக் அப்துல்லா வெளியேறி சென்றுவிட்டதாக எண்ணியுள்ளனர். சிறிது நேரத்தில் குளித்துமுடித்து வெளியே வந்த அவர்கள், சேக் அப்துல்லாவை தேடி பார்த்தும் காணாததால் சந்தேகத்தின்பேரில் போலீஸூக்கும், தீயணைப்பு மீட்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தேடியதில் அரை மணி நேரத்திற்கு பின் இறந்த நிலையில் சேக் அப்துல்லா மீட்கப்பட்டார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.