/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் மார்க்கெட்டிங் வியாபார தளமாக மாற்றமா?
/
வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் மார்க்கெட்டிங் வியாபார தளமாக மாற்றமா?
வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் மார்க்கெட்டிங் வியாபார தளமாக மாற்றமா?
வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் மார்க்கெட்டிங் வியாபார தளமாக மாற்றமா?
ADDED : ஜன 16, 2012 12:39 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் மார்க்கெட்டிங் தொழில் துறையினரின் வியாபார தளமாக மாறியுள்ளது.
வ.உ.சி., பூங்கா அருகிலுள்ள மாவட்ட விளையாட்டு பிரிவு விளையாட்டு மைதானத்துக்கு எதிரில், மாநகராட்சியின் வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. காலை முதல் மாலை வரை திறந்திருக்கும் இம்மைதானத்தில், காலை, மாலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளை ஏராளமானோர் மேற்கொள்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் இளைஞர்கள் குழுக்களாக கிரிக்கெட் விளையாடுகின்றனர். அரசு, தனியார் சார்பில் பெரியளவிலான நிகழ்ச்சிகள், கண்காட்சி, பொதுக்கூட்டம் நடத்தவும் மைதானம் வாடகைக்கு விடப்படுகிறது. இம்மைதானம் சமீபகாலமாக தனி நபர்களாலும், சில தனியார் நிறுவனங்களாலும் அனுமதிபெறாத வணிக தளமாக மாற்றப்படுகிறது. குறிப்பாக எம்.எல்.எம்., மார்க்கெட்டிங் துறை சார்ந்தோர் மற்றும் பல்வேறு தறை சார்ந்த விற்பனை பிரதிநிதிகள் தங்களது வியாபாரம் தொடர்பான கூட்டங்களை நடத்துவதுக்கும், யுக்திகளை வகுப்பதற்கான தளமாக மாற்றியுள்ளனர். காலை வேளையில் மார்க்கெட்டிங் தொழிலுக்கு புறப்படும் முன் தனியார் நிறுவன அதிகாரிகள், தங்களது பிரதிநிதிகளை மைதானத்துக்கு வரவழைத்து, நிற்க வைத்தவாறு அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஆலோசனைகளை வழங்கி பின்னர் கலைந்து செல்கின்றனர். கடந்த நான்கைந்து மாதங்களாக காலை 8 முதல் 10 மணி வரை இதுபோன்ற கூட்டங்களை அதிகளவில் காண முடிகிறது. சிலர் மாலை நேரங்களில் வியாபாரம் சம்பந்தமான கூட்டங்களை நடத்துகின்றனர். இதுபோன்ற கூட்டங்களை மைதானத்தில் நடத்தும் போது, யாரிடமும் அனுமதி பெறுவதில்லை. ஹோட்டலிலோ அல்லது வேறு வாடகை இடத்திலோ பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகும். இதை மிச்சப்படுத்தவே இதுபோன்ற கூட்டங்களை மைதானத்தில் நடத்துகின்றனர். விளையாட்டு மைதானம் முழுமையான வியாபார தளமாக மாறுவதுக்கு முன் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுகொள்ள வேண்டும்.