/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெல்லம் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை
/
வெல்லம் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை
ADDED : ஜன 05, 2025 02:02 AM
வெல்லம் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை
ஈரோடு,:சித்தோட்டில் செயல்பட்டு வரும் வெல்லம் சொசைட்டி மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார், சதீஷ்குமார், எழில், தன்பியா பானு, ஸ்ரீதேவி பிரியா ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள் முன்னிலையில் வெல்லம், நாட்டு சர்க்கரையில் கலப்படம் குறித்தும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் விளக்கினர்.
அங்கு இருப்பு வைக்கப்பட்ட மற்றும் விற்பனைக்கு வரத்தான வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றை ஆய்வு செய்து, சந்தேகத்தின் அடிப்படையில் சில உணவு மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பினர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், மாவட்டம் முழுவதிலும், வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி அதிகமாக உள்ளது. உற்பத்தி செய்யும் இடங்கள், விற்பனை மற்றும் சேமித்து வைக்கும் இடங்கள், மொத்த வியாபாரம் நடக்கும் இடங்களிலும் ஆய்வு செய்துள்ளோம். கலப்படம் கண்டறியப்பட்டாலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் வணிகம் செய்வது கண்டறிந்தாலும், சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்றனர்.
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 4,399 மூட்டைகளில், ௧.௮௩ லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 128.31 ரூபாய் முதல் 150.55 ரூபாய்; இரண்டாம் தரம், 128.31 ரூபாய் முதல் 149 ரூபாய் வரை, ௨.௪௦ கோடி ரூபாய்க்கு விற்றது.
* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று நடந்தது. இதில் துவரம் பருப்பு(கிலோ), 140 முதல், 150 ரூபாய்க்கு விற்பனையானது. குண்டு உளுந்து, 140, பச்சை பயிர் மற்றும் தட்டை பயிர், தலா 120 ரூபாய்க்கும், பாசிப்பருப்பு, 130, கொள்ளு, 80, மல்லி, 110, சீரகம், 340, கடுகு, 100, கடலைப்பருப்பு, 110, மிளகு, 780, வெந்தயம், 100, பொட்டுக்கடலை, 110, கருப்பு சுண்டல், 100, வெள்ளை சுண்டல், 120, வரமிளகாய், 180, புளி, 120 ரூபாய்க்கும் விற்றது.
* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏல விற்பனையில், நாட்டு சர்க்கரை, 30 கிலோ எடையில், 2,900 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை, 1,100 ரூபாய் முதல், 1,360 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,600 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,410 ரூபாய்; அச்சு வெல்லம், 300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,350 ரூபாய் முதல், 1,420 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலையில் மாற்றமில்லை.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 21,397 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 37.91 ரூபாய் முதல், 59.49 ரூபாய் வரை, 6,590 கிலோ, 3.40 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 83 மூட்டை எள் வரத்தானது. வெள்ளை எள் கிலோ, 103 ரூபாய் முதல் 142 ரூபாய்; கருப்பு ரகம், 148 ரூபாய்; 170 தேங்காய் வரத்தாகி ஒரு காய் ஒன்பது ரூபாய் மதுல் 18 ரூபாய்க்கு விற்றது. ஐந்து மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 76-137 ரூபாய்க்கு விற்றது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 7,680 காய்கள் வரத்தாகின. முதல் தரம் கிலோ, 55.15 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 38.65 ரூபாய்க்கும் ஏலம் போனது.