/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தனி நபர் வருமான வரி விலக்கை வரவேற்கலாம்'
/
'தனி நபர் வருமான வரி விலக்கை வரவேற்கலாம்'
ADDED : பிப் 02, 2025 01:18 AM
'தனி நபர் வருமான வரி விலக்கை வரவேற்கலாம்'
ஈரோடு : மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்புகள், விவசாயம், தொழில், பொது அமைப்புகள் சார்ந்தவர்கள் மத்தியில் ஏற்படுத்திய வரவேற்பும், எதிர்பார்ப்பும் உள்ளது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பி.ரவிச்சந்திரன்: தனி நபர் வருமான வரி விலக்கு, 12 லட்சம் ரூபாய் என அறிவித்துள்ளனர். அதில் கூட, 8 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, 5 சதவீதம், 10 முதல், 12 லட்சம் ரூபாய் வரை, 10 சதவீதம் வரி என சில வரம்பு வைத்துள்ளனர். இருப்பினும், இதை வரவேற்கலாம். அதேநேரம் கார்ப்பரேட்களுக்கு வரி உள்ளிட்ட பல சலுகைகள் அறிவித்துள்ளனர். நுால் இறக்குமதிக்கு அனுமதி, பருத்தி விளைச்சலை ஊக்கப்படுத்தும் திட்டங்களை வரவேற்கலாம். 2 வகை ஆட்டோ லுாம்களை வரி இன்றி இறக்குமதி செய்ய அனுமதி தந்துள்ளனர். அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் டோல்கேட் பற்றி ஏதும் சொல்லவில்லை. டி.டி.எஸ்.,ல், 6 லட்சம் ரூபாய் வரை விலக்கு கொடுத்துள்ளனர். இருந்தாலும் வருமான வரிச்சட்டத்தை மீண்டும் ஒரு வாரத்தில் தாக்கல் செய்வதாக கூறி உள்ளனர். டில்லி இடைத்தேர்தலுக்காக அதை தள்ளி வைத்துள்ளனர். அதை அறிவிக்கும்போது பிற தகவல் தெரியவரும்.
தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி: தனி நபர் வருமான வரி, 12 லட்சமாக உயர்வு, முதியோர்களுக்கு வரிச்சலுகை, மக்காசோளத்துக்கு தனி வாரியம் அறிவிப்பு, கிசான் கார்டு வரம்பு, 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியது வரவேற்கலாம். யூரியா மட்டும் விலை குறைவு. பிற உர விலை குறைப்பு, மானிய அறிவிப்பு இல்லை. தோல் இறக்குமதிக்கு சலுகை வழங்கி, வேலைவாய்ப்பு உயரும் என்கின்றனர். அதை பயன்படுத்தி காலணி, பை, பர்சாக செய்து ஏற்றுமதி செய்யும்போது, நிலம், நீர், காற்று மாசுபடும். 300 புற்றுநோய் சிகிச்சை மையம், உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பை ஏற்கலாம். அந்நோய் வராமல் தடுக்க கலப்படத்தை தடுக்க திட்டமில்லை. பீகாருக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கியது, நடுநிலையல்ல. லித்தியம் பேட்டரிக்கு சலுகை, மின்சார வாகன சலுகை நல்லது. விவசாயத்துக்கு, 71,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய இணை செயலாளர் ஆ.ராஜா: அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் இலவச பிராட்பேண்ட் இணைப்பு, மருத்துவ படிப்பில், 10,000 மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள், ஐ.ஐ.டி., போன்ற ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, தாய்மொழி பாடங்களுக்கு டிஜிட்டல் முறை பதிவு வழங்குதலை வரவேற்கலாம். ஜல்ஜீவன் திட்டம் மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பால் குடிநீர் பிரச்னை தீரும். 7.5 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் உதவி முன்னேற்றம் தரும்.
தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா: தமிழகத்துக்கென புதிய ரயில், கொங்கு மண்டலம் பயன் பெறும் வகையில் கூடுதல் ரயில் அறிவிப்பு இல்லை. கொரோனா உட்பட பல்வேறு காரணத்தால் நிறுத்தப்பட்ட ரயில் இயக்கம் பற்றி அறிவிப்பு இல்லை. ஈரோடு உட்பட பிரதான ரயில்வே ஜங்ஷன் மேம்பாட்டு திட்டம், ரயில்வே கீழ்நிலை பாலங்களை உயர்மட்ட பாலங்களாக அமைப்பது தொடர்பான அறிவிப்பு இல்லை.
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு: கிசான் கிரெடிட் கார்டு கடன் வரம்பு, 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சமாக உயர்வு, 7.5 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் உதவி, தேசிய அளவில், 100 மாவட்டங்களில் 'தன் தான்யா கிரிஷி' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்ததை வரவேற்கலாம். புதிய வேளாண் கடன் திட்டங்கள், நீண்ட கால பயிர் வகை உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் இல்லை. வேளாண் விளை பொருட்களுக்கான ஆதார விலை அறிவிப்பு இல்லை, பி.எம்.கிசான் தொகை உயர்த்தாததும் ஏமாற்றம்.
அகில இந்திய விசைத்தறி வாரிய முன்னாள் உறுப்பினர் எம்.ராஜேஷ்: பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு, 2 கோடி ரூபாய் வரை 'டேர்ம் லோன்' திட்டம் முன்னேற்றம் தரும். 12 முக்கிய தாதுக்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, 10,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், மேலும், 10,000 கோடி ரூபாய் புதிய நிதியாக ஒதுக்கியது நல்ல வளர்ச்சியை தரும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் உத்தரவாத கவரேஜ், 5 கோடி ரூபாயில் இருந்து, 10 கோடியாக உயர்ந்துள்ளதை வரவேற்கலாம்.