/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் சர்வதேச மகளிர் தினவிழா பேரணி
/
ஈரோட்டில் சர்வதேச மகளிர் தினவிழா பேரணி
ADDED : மார் 09, 2025 01:37 AM
ஈரோட்டில் சர்வதேச மகளிர் தினவிழா பேரணி
ஈரோடு:ஈரோட்டில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண் போலீசார், -விளையாட்டு வீராங்கனைகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்வதேச மகளிர் தினமான நேற்று, ஈரோடு மாவட்ட போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு சார்பில், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்டத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள், போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஈரோடு எஸ்.பி., ஜவகர், வ.உ.சி., பூங்கா மைதானம் அருகே பேரணியை தொடங்கி வைத்தார். ஸ்வஸ்திக் ரவுண்டானா, மேட்டூர் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, பெருந்துறை சாலை வழியே ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பெண் குழந்தைகளே துணிந்து செயல்படு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு குரல் கொடு.
பெண் குழந்தைகள் நமது கண்கள். குழந்தை திருமணத்தை தடுத்திடு என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, கைகளில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில் ஏ.டி.எஸ்.பி., க்கள் விவேகானந்தன், ராஜா ரணவீரன், வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெண் ஊழியர்கள், கவுன்சிலர்கள், அம்மா உணவக ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சி, மியூசிக்கல் சேர், லெமன் ஸ்பூன், கோல போட்டி, பாட்டு, பேச்சு போட்டி நடத்தப்பட்டது. மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி தலைமை வகித்தார். மேயர் நாகரத்தினம், தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
* சென்னிமலை பேரூராட்சியில், 10 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர். மகளிர் தினவிழாவை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் மற்றும் பெண் கவுன்சிலர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் சேலையும், பணியாளர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் சேலையும் அணித்து அலுவலகம் வந்தனர். கண் சிகிச்சை முகாம், இனிப்பு வழங்குதல், வாழ்த்து தெரிவித்தல் என மகளிர் தின விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
* ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்., சார்பில், உலக மகளிர் தினவிழா கொண்டாடினர். மாநகர் மாவட்ட மகிளா காங்., தலைவி ஞானதீபம் தலைமை வகித்து, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, கோமதி, சோபியா உட்பட பலர் பங்கேற்றனர்.
* நம்பியூரில், த.வெ.க., மகளிர் அணி சார்பில், ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நம்பியூர் பேரூர் செயலர் சந்திரசேகரன் தலைமையில், மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.-