/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாஜி முதல்வர் படம் மாநகராட்சியில் மாயம்
/
மாஜி முதல்வர் படம் மாநகராட்சியில் மாயம்
ADDED : ஜூலை 14, 2011 01:33 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கவுன்சில் கூட்ட அரங்கில் இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஃபோட்டோ மாயமானது.
ஈரோடு மாநகராட்சி கவுன்சில் கூட்ட அரங்கில், காந்தியடிகள், முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தேசத் தலைவர்கள், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் நகராட்சித் தலைவர்கள் ஃபோட்டோக்கள் மாட்டப்பட்டுள்ளன. எந்த மாநகராட்சி, நகராட்சியிலும் இல்லாத அளவுக்கு, குறைந்த காலம் மட்டுமே முதல்வராக இருந்தவரும், தற்போதைய நிதித்துறை அமைச்சருமான பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோ, ஈரோட்டில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை மன்றத்திலிருந்த பன்னீர்செல்வம் ஃபோட்டோ கழற்றப்பட்டு, அந்த இடம் காலியாக இருந்தது. ஃபோட்டோவை கழற்றியதற்கான காரணம் குறித்து, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரனிடம் கேட்ட போது, ''முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் ஃபோட்டோ கழற்றிய தகவல் நீங்கள் கூறிய பின்தான் எனக்கு தெரியும். நான் சென்னையில் இருந்தேன். நேற்று (முன்தினம்) காலை தான் வந்தேன். இதுகுறித்து விசாரிக்கிறேன்,'' என்றார். மேயர் குமார் முருகேஸிடம் கேட்ட போது, ''மேயர் அனுமதியின்றி கூட்ட அரங்கை திறக்கவே கூடாது. ஆனால், அந்த விதிமுறையெல்லாம் இங்கு பின்பற்றப்படுவதாக தெரியவில்லை. எனது அனுமதியில்லாமல் இன்று (நேற்று) கூட்ட அரங்கை திறந்துள்ளனர். கூட்ட அரங்கிலிருந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் படத்தை கழற்ற நான் கூறவில்லை. இதை கமிஷனரைத் தான் கேட்க வேண்டும்,'' என்றார்.

