/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரியில் நுழைவுச்சீட்டு பரிசோதனை
/
கொடிவேரியில் நுழைவுச்சீட்டு பரிசோதனை
ADDED : மே 20, 2024 01:56 AM
கோபி: கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், நுழைவுச்சீட்டு பரிசோதிக்கப்படுகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. அருவியில் குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். நீர்வீழ்ச்சியில் குளிக்க, சுற்றுலா பயணிகளிடம், நீர்வள ஆதாரத்துறை சார்பில், நுழைவு கட்டணமாக, ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான நுழைவுச்சீட்டை பரிசோதிக்காததால், கும்பலாக வருவோர், சர்வசாதாரணமாக ஓசியில் குளித்து சென்றனர்.
இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பாசன உதவியாளர்கள் மூலம், தற்போது நுழைவுச்சீட்டு பரிசோதித்த பின்னரே, தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக சுற்றுலா பயணிகள், தடுப்பணைக்குள் நுழைய ஒரு வழியும், வெளியேற ஒரு வழியும் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் நுழையும் பகுதியில், தற்போது நுழைவுச்சீட்டு பரிசோதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு நீடித்தால், நீர்வள ஆதாரத்துறைக்கு, நுழைவுச்சீட்டு மூலம் வருவாயும் அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. நேற்று வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததால், கொடிவேரி தடுப்பணைக்கு, குறைந்த சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர்.

