ADDED : மே 21, 2024 11:39 AM
நம்பியூரை அடுத்த எம்மாம்பூண்டி, கோமாங்காட்டுபாளையம், ராஜிவ்காந்தி நகர், இச்சிபாளையம், வெள்ளாளபாளையம், திமப்பயன்பாளையம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று கனமழை கொட்டியது. இதனால் சந்தன நகர் பகுதி குட்டை நிரம்பி உபரி நீர் வெளியேறியது.
இதனால் ராஜீவ்காந்தி நகர் ஆண்டிக்காடு, வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. ஆண்டிக்காடு பகுதியில் ஆடு, மாடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
நம்பியூர் சுற்றுவட்டார பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குட்டை, குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்ட்டது. இச்சிபாளையம் மற்றும் கெடாரை பகுதியில் குளங்கள் நிரம்பி வெ ளியேறிய மழைநீரால் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான தர்பூசணி பழங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

