/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு கோலாகலம்
/
கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு கோலாகலம்
ADDED : ஏப் 15, 2025 01:52 AM
கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு கோலாகலம்
தமிழ் புத்தாண்டு தினமான நேற்று ஈரோடு மாநகர், மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு களை கட்டியது. அதிகாலை முதலே கோவிலுக்கு சென்ற மக்கள், வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டு பிறப்பான நேற்று, சென்னி
மலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தொடங்கியது. இதனால் அதிகாலை, ௫:௦௦ மணிக்கு நடை திறந்து யாக பூஜை, முருகப்பெருமான் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். அதிகாலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம், கூட்டமாக வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். மக்கள் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் கூடுதல் பஸ் இயக்கப்பட்டது.
இதேபோல் சென்னிமலையில் உள்ள கைலாச நாதர், மாரியம்மன், காமாட்சியம்மன், எல்லை மாகாளியம்மன், பிராட்டியம்மன் உள்ளிட்ட கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு களை கட்டியது.
* ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்துாரி அரங்கநாதர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரை சோழிஸ்வரர் கோவில், பெரிய மாரியம்மன், ஈரோடு வைகை நகர் செல்வ விநாயகர் கோவில், கைகாட்டி வலசு திருவள்ளூவர் நகர் லட்சுமி தருண கணபதி கோவில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பெரும்பாலான வீடுகளில் சித்திரை கனி காணும் நிகழ்வு நடந்தது.
* பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி கோவில்களில், தமிழ்புத்தாண்டை முன்னிட்டு மக்கள், குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தனர். பவானி செல்லியாண்டியம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கனிகளால் அலங்காரம்
கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 60 அடி நீள குண்டத்தில் பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோபி அருகே வேலுமணி நகர் சக்தி விநாயகருக்கு, ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு கனிகள் தலா எட்டு கிலோ, அன்னாசி பழம், 45, முலாம்பழம், 30, திராட்சை மூன்று கிலோ, பூவன் ரக வாழைத்தார் என, 250 கிலோ கனிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
* பெருந்துறை சோழீஸ்வரர் கோவில், வெங்கட்டரமண சுவாமி கோவில், கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும், புத்தாண்டு சிறப்பு வழிபாடு களை கட்டியது.
* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நடந்தது. இதேபோல் அந்தியூர் ஈஸ்வரர் மற்றும் பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
பஞ்சாங்கம் வாசிப்பு
-திருப்பூர் மாவட்டத்தில் பிரசத்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், பஞ்சங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி, பக்தர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. விசுவாவசு ஆண்டில் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள நன்மை, தீமை வாசிக்கப்பட்டது. கோவிலில் குவிந்த பக்தர்கள், பலமணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் வந்ததால் மக்கள் வெள்ளத்தில் சிவன்மலை மூழ்கியது.
நிருபர் குழு