/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காட்டன் பாவு நுால் வழங்க அரசு சம்மதம் நெசவாளர்கள் அறிவித்த ஸ்டிரைக் வாபஸ்
/
காட்டன் பாவு நுால் வழங்க அரசு சம்மதம் நெசவாளர்கள் அறிவித்த ஸ்டிரைக் வாபஸ்
காட்டன் பாவு நுால் வழங்க அரசு சம்மதம் நெசவாளர்கள் அறிவித்த ஸ்டிரைக் வாபஸ்
காட்டன் பாவு நுால் வழங்க அரசு சம்மதம் நெசவாளர்கள் அறிவித்த ஸ்டிரைக் வாபஸ்
ADDED : ஆக 13, 2024 07:44 AM
ஈரோடு: இலவச சேலை உற்பத்திக்கு பாலியஸ்டர் பாவு நுாலுக்கு பதில், காட்டன் நுால் கேட்டு, நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தை நெசவாளர்கள் வாபஸ் பெற்றனர்.
அரசு சார்பில் இலவச வேட்டி, சேலையை விசைத்தறி மூலம் உற்பத்தி செய்து, பொங்கல் பண்டிகையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. வரும், 2025 பொங்கல் பண்டிகையில் வழங்குவதற்காக, 1.73 கோடி சேலை, 1.73 கோடி வேட்டி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால், இதுவரை நுால் டெண்டர் நிறைவு செய்து, நெசவாளர்களுக்கு வழங்காததால், பணி
தொடங்கவில்லை.
இதற்கிடையில் வழக்கமாக காட்டன் பாவு நுால் வழங்குவார்கள். இந்தாண்டு பாலியஸ்டர் பாவு நுால் வழங்கவும், வெளி மாநிலங்களில் மொத்தமாக சேலையை விலைக்கு வாங்கி வழங்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால்தான் நுால் வழங்கவில்லை என்றானது.
இத்திட்டத்தின் நோக்கமே, விசைத்தறியாளர்கள், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டில் பெரும்பகுதி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாகும். இதற்கு மாறாக பாலியஸ்டர் நுால் வழங்கினால், தற்போது நடைமுறையில் உள்ள 'சைசிங்' மூலம் பாவு ஓட்ட இயலாத நிலை ஏற்படும். எனவே, முன்பு போல காட்டன் பாவு நுால் வழங்க கோரி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை விசைத்தறிகள் வேலை நிறுத்தம் மற்றும் வீரப்பன்சத்திரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதற்கிடையில் அரசு தரப்பில் கூட்டமைப்பினரிடம் பேசினர். ஈரோடு, தி.மு.க.,- எம்.பி., பிரகாஷ், கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் பேசியதால், உண்ணாவிரதத்தை ஆர்ப்பாட்டமாக மாற்றினர். ஆனால், காலை, 6:00 மணி முதல் விசைத்தறிகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
காலை, 9:30 மணிக்கு மேல் ஆர்ப்பாட்டத்துக்கு விசைத்தறியாளர்கள் தயாரான நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில், 'முன்பு போல, காட்டன் பாவு நுால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தை முதல்வருக்கு நன்றி அறிவிப்பு கூட்டமாக மாற்றி, செயலாளர் வேலுசாமி, தலைவர் சுரேஷ், பொருளாளர் பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்து பேசினர். காலை, 6:00 மணிக்கு துவங்கிய வேலை நிறுத்தத்தை, 10:00 மணிக்கு விலக்கி கொண்டு, விசைத்தறி இயக்கத்தை துவக்கினர்.

