ADDED : பிப் 14, 2025 01:14 AM
தேசிய அளவிலான கருத்தரங்கு
ஈரோடு :ஈரோடு வேளாளர் மருந்தியல் கல்லுாரி, சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை இணைந்து இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு வேளாளர் மகளிர்
கல்லுாரியில் நடந்தது. நரம்பியல் குறைபாடு, அது சம்பந்தப்பட்டநோய்களின் சமீபத்திய தாக்கங்கள், சிகிச்சைமுறை மற்றும் எதிர்கால முன்னேற்பாடு என்ற தலைப்பில் நடந்தது. விருந்தினர்களை கல்லுாரி முதல்வர்
சரவணகுமார் வரவேற்றார். வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் மற்றும் கல்லுாரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரி அன்னை தெரசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த கவிமணி; திருவனந்தபுரம், ராஜிவ்காந்தி உயிரி தொழில் நுட்பமையத்தை சேர்ந்த மொய்னாக் பானர்ஜி சிறப்பு விருந்தினர்களாக
பங்கேற்றனர்.
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 60 ரூபாய், நேந்திரன், 61 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 690, தேன்வாழை, 640, செவ்வாழை, 1,300, ரஸ்த்தாளி, 620, பச்சைநாடான், 520, ரொபஸ்டா, 510, மொந்தன், 490 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 2,867 வாழைத்தார்களும், 8.58 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* தாளவாடிஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 18 மூட்டை வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 138.35 ரூபாய், குறைந்தபட்சம், 110.29 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 9 குவிண்டால் தேங்காய் பருப்பு, ௧.௦௮ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 1,910 ரூபாய்க்கு ஏலம்போனது. முல்லை-1,840, காக்கடா-1,025, செண்டுமல்லி-48, கோழிகொண்டை-155, ஜாதிமுல்லை-1,000, கனகாம்பரம்-760, சம்பங்கி-160, அரளி-320, துளசி-40, செவ்வந்தி-200 ரூபாய்க்கும் விற்பனையானது.
* அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. காய்ந்த நிலக்கடலை (இரண்டாம் தரம்), 51 மூட்டை வரத்தாகி, கிலோ, 50.50 - 60.52 ரூபாய்க்கு விற்றது. பச்சை நிலக்கடலைய், 179 மூட்டை வரத்தாகி, ஒரு கிலோ, 27.19 - 38 ரூபாய்க்கு விற்றது.
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 6,000 ரூபாய் முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 30 கன்றுகள், 22,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 100 எருமைகள், 23,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 150 பசு மாடுகள் 70,000 ரூபாய்க்கு மேலான விலையில் 50க்கும் மேற்பட்ட முழு கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் ஆர்வமாக மாடுகளை வாங்கி சென்றனர்.
* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. ஒரு கிலோ, 145 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை, 1,154 கிலோ தேங்காய் பருப்பு, 1.52 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.