ADDED : ஏப் 01, 2025 02:11 AM
எலக்ட்ரானிக் தராசு வினியோகம்
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. ஒன்பது லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த பிப்., மாதம், மாவட்டத்தில் இரண்டு ரேஷன் கடைகளில் புதிய தராசு பொருத்தப்பட்டு, சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது. இந்நிலையில் படிப்படியாக ரேஷன் கடைகளுக்கு தராசு வழங்கப்பட்டுவருகிறது.
விற்பனையாளர் சுயமாக பொருளின் எடையை உள்ளீடு செய்யமுடியாது. இதனால், ரேஷன் பொருட்கள் எடை குறைவாக வினியோகிப்பது தடுக்கப்படும். ஒவ்வொரு முறையும் தராசில் பொருள் வைத்தபின்னரே, பாய்ன்ட் ஆப் சேல் மெஷினில் பதிவு செய்யமுடியும் என்பதால், உதவியாளர் இல்லாத கடைகளில், பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படும். விற்பனையாளர் இல்லாதநிலையில், ஒரு விற்பனையாளரே இரண்டு ரேஷன் கடைகளை கவனிக்கின்றனர். இதுபோன்ற கடைகளிலும் விற்பனை பாதிக்கும்.
பணிச்சுமை அதிகரிக்கும்!தமிழ்நாடு கூட்டுறவு சம்மேளன மாநில பொதுச்செயலாளர் கவுதமன் கூறியதாவது:
ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுவரும் புதிய வகை தராசில், உணவுப்பொருளை 50 கிராம் கூட குறைவாக எடைபோட முடியாது. எனவே, ரேஷன் கடைகளுக்கு, கூட்டுறவுத்துறை, ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கவேண்டும். உதவியாளர் இல்லாத கடைகளில், விற்பனையாளரே பில் போட்டு, பொருட்களை எடைபோட்டு வழங்கவேண்டியுள்ளது. ஒரே விற்பனையாளர் இரண்டு கடைகளில் பணிபுரியவேண்டியுள்ளதால் பணிச்சுமை ஏற்படுகிறது. ரேஷன் காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தி மூன்று மாதங்களாகிறது. ஆனால் இன்னும், பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே, உடனடியாக மாவட்டம் முழுவதும்ரேஷன்கடைகளில், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.